கொடைக்கானல் மலைப்பூண்டு விவசாயிகளுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ்


கொடைக்கானல் மலைப்பூண்டு விவசாயிகளுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ்
x

கொடைக்கானல் மலைப்பூண்டு விவசாயிகளுக்கு, புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழை கலெக்டர் விசாகன் வழங்கினார்.

திண்டுக்கல்

புவிசார் குறியீடு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கிளாவரை உள்ளிட்ட 10-க் கும் மேற்பட்ட இடங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. குறிப்பாக மலைப்பூண்டு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மருத்துவ குணம் வாய்ந்த இந்த மலைப்பூண்டு கொடைக்கானலின் அடையாளத்தில் ஒன்றாக உள்ளது. இதற்கு புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப துறையினர் ஈடுபட்டனர். இதன் பயனாக கடந்த 2021-ம் ஆண்டில் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது.

அங்கீகார சான்றிதழ்

இந்நிலையில் கொடைக்கானலில் விற்பனை செய்யப்படுகிற மலைப்பூண்டில் கலப்படம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து கொடைக்கானல் மலைப்பூண்டு-காய்கனிகள் மேல்மலை விவசாயி சங்கம் மற்றும் கோடை மலைப்பூண்டு மற்றும் காய்கனிகள் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய 2 சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள மேல்மலை கிராம விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோருக்கு புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில், மலைப்பூண்டுக்கான புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

மானியத்துடன் கடன்

விழாவில் கலெக்டர் விசாகன் பேசுகையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்போது 635 ஹெக்டேர் ஏக்கர் பரப்பளவில் மலைப்பூண்டு பயிரிடப்பட்டு வருகிறது. சுமார் 12 ஆயிரம் மெட்ரிக் டன் மலைப்பூண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. 6 மாதத்துக்கு ஒரு முறை மட்டும் விளையும் மலைப்பூண்டுகளை, விவசாயிகள் உற்பத்தி செய்து மற்ற பூண்டுகளை கலப்படம் செய்யாமல் புவிசார் குறியீடு அங்கீகார ஸ்டிக்கர்களுடன் விற்பனை செய்ய வேண்டும்.

மலைப்பூண்டுகளை, மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்த வேண்டும். மலைப்பூண்டின் மகத்துவம் உணர்ந்து அதில் இருந்து மலைப்பூண்டு ஊறுகாய், மலைப்பூண்டு மாலை, மலைப்பூண்டு லேகியம் உள்ளிட்டவற்றை விவசாயிகள் தயார் செய்து பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். அதற்கு விவசாயிகளுக்கு மானியத்துடன் கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்றார்.

இந்த விழாவில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் கலா, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் சீனிவாசன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிளாரா தேன்மொழி, கொடைக்கானல் ஆர்.டி.ஓ. ராஜா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக உயிர் தொழில் நுட்ப தலைவர் உஷா ராஜநந்தினி, விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த நாட்ராயன், செல்லையா, பாலகிருஷ்ணன், தனமுருகன், கோபாலகிருஷ்ணன், அருள்ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story