சிறுபான்மை மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு தனி அலுவலர்கள்: அமைச்சர் செஞ்சிமஸ்தான்
சிறுபான்மை மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு தனி அலுவலர்கள் நியமிக்கப்படுவதாக அமைச்சர் செஞ்சிமஸ்தான் தெரிவித்தார்.
சிறுபான்மை மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தெகை வழங்கும் திட்டத்தை சிறப்பாக ெசயல்படுத்த மாவட்டம் தோறும் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக சிறுபான்யைினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
ஆய்வு கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டு 186 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நிதியுதவி
சிறுபான்மையினர் நலனை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்களை கூடுதலாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களை பராமரிக்க நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். மாவட்ட அதிகாரிகள் இது தொடர்பாக உரிய விண்ணப்பங்களை பெற்று அனுப்பினால் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
கிறிஸ்தவ தேவாலய பணியாளர்களுக்கும் நலவாரியம் அமைக்கப்பட்டு உள்ளது. தகுதியானவர்கள் அதில் பதிவு செய்து அனைத்து வகையான நலத்திட்ட உதவிகளையும் பெறலாம்.
உலமாக்களுக்கு மொபட்
உலமாக்கள் மொபட் வாங்க மானியம் வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல உலமாக்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 ஆயிரத்து 518 பேருக்கு அடுத்த மாதம் இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இதனை பெற தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்து மாவட்ட அதிகாரிகள் அனுப்ப வேண்டும். பணிபுரிந்து ஓய்வு பெற்ற உலமாக்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. அவர்கள் இறந்துவிட்டால் அவர்களது மனைவிக்கு ஓய்வூதியத்தை வழங்கும் வகையில் சிறப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். வக்பு வாரியம் மூலம் வழங்கப்படும் இந்த ஓய்வூதியத்தை பெற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
தனி அலுவலர்
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனை பாதுகாப்பதிலும் அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்வோர் அது சரியான நிறுவனமா என்பதை ஆய்வு செய்துவிட்டு செல்ல வேண்டும். போலி ஏஜென்டுகளை நம்பி பலர் வெளிநாடுகளுக்கு சென்று சிக்கி தவிக்கின்றனர். இந்த நிலையை போக்க அரசு சார்பில் சிறப்பான ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. வெளிநாடு செல்ல விரும்போர் அரசிடம் பதிவு செய்தால், அவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து உரிய தகுதியை உருவாக்கி வெளிநாட்டுக்கு அனுப்புகிறோம். அவ்வாறு தகுதியோடு அவர்கள் சென்றால் அங்கு சிக்கல் இருக்காது. விரைவில் காப்பீட்டு திட்டமும் இதில் இணைக்கப்படும். வெளிநாடுகளில் வேலை செய்துவிட்டு திரும்பி வரும்போது அவர்கள் வயது முதிர்வடைந்தால், அவர்களுக்கு மாத உதவித் தொகை வழங்கும் திட்டமும் அரசிடம் பரிசீலனையில் உள்ளது. மேலும், வெளிநாடுகளில் விபத்து மற்றும் இயற்கையாக மரணமடைய நேர்ந்தால் அவர்களது குடும்பங்களுக்கு உரிய பாதுகாப்பு, குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
கல்வி உதவித்தொகை
சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது முக்கியமான திட்டமாகும். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அனைத்து மாவட்டங்களுக்கும் தனி அலுவலர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக 5 மாவட்டங்களுக்கு தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு மேலும் 5 மாவட்டங்களுக்கு தனி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் தனி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். மேலும், தமிழகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 1000 தையல் எந்திரங்கள் வழங்கப்பட உள்ளன. அதற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து மாவட்ட அதிகாரிகள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மறுவாழ்வு முகாம்களில் கலந்துரையாடல்
பின்னர் மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துரையாடி, அவர்களது தேவைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அதன்பிறகு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி, மாவட்ட விளையாட்டு அரங்கம் ஆகிய இடங்களில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தாளமுத்துநகர், மாசார்பட்டி, குளத்துவாய்பட்டி ஆகிய இடங்களில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் நேரில் ஆய்வு செய்தனர்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ, அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், கூடுதல் கலெக்டர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், ஆவின் தலைவர் சுரேஷ்குமார், உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.