ஒரு தரப்பு மாணவர்களுக்கு பொருட்கள் வழங்க மறுப்பு-கடைக்கு 'சீல்' வைப்பு


ஒரு தரப்பு மாணவர்களுக்கு பொருட்கள் வழங்க மறுப்பு-கடைக்கு சீல் வைப்பு
x

சங்கரன்கோவில் அருகே ஒரு தரப்பு மாணவர்களுக்கு பொருட்கள் வழங்க மறுத்த கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதுதொடர்பாக கடைக்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே ஒரு தரப்பு மாணவர்களுக்கு பொருட்கள் வழங்க மறுத்த கடைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இதுதொடர்பாக கடைக்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெட்டிக்கடைக்காரர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேசுவரன். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பு பள்ளிக்கூட மாணவர்கள் தின்பண்டம் உள்ளிட்ட பொருட்களை வாங்க சென்றனர்.

அப்போது அவர்களுக்கு பொருட்களை வழங்க மறுத்த மகேசுவரன், அதனை வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ்-அப்பில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

தீண்டாமை வழக்கை வாபஸ் பெறக்கோரி...

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பாஞ்சாகுளம் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட தீண்டாமை வழக்கை வாபஸ் பெறக்கோரி, ஒரு தரப்பினரை மற்றொரு தரப்பினர் வலியுறுத்தினர். இதற்கு அவர்கள் மறுத்தனர். இதனால் அந்த தரப்பினரின் குழந்தைகளுக்கு மகேசுவரன் தனது பெட்டிக்கடையில் பொருட்கள் வழங்க மறுத்ததும், அதனை அவர் வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ்-அப் குரூப்பில் வெளியிட்டதும் தெரியவந்தது.

2 பேர் கைது

இதுதொடர்பாக பெட்டிக்கடைக்காரர் மகேசுவரன், அவருடைய உறவினரான அப்பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற மூர்த்தி (வயது 20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான முருகன், குமார், சுதா ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் சங்கரன்கோவில் உதவி கலெக்டர் கலெக்டர் சுப்புலட்சுமி, தாசில்தார் பாபு மற்றும் அதிகாரிகள் பாஞ்சாகுளத்துக்கு சென்று, மகேசுவரனின் கடைக்கு 'சீல்' வைத்தனர். சங்கரன்கோவில் அருகே ஒரு தரப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு பொருட்கள் வழங்க மறுத்த கடைக்காரர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டதும், கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story