விபத்து வழக்குகளில் இழப்பீடு வழங்குவதற்காககடந்த 5 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது- மதுரை ஐகோர்ட்டில் தகவல்


விபத்து வழக்குகளில் இழப்பீடு வழங்குவதற்காககடந்த 5 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது- மதுரை ஐகோர்ட்டில் தகவல்
x

விபத்து வழக்குகளில் இழப்பீடு வழங்குவதற்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என மதுரை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மதுரை


விபத்து வழக்குகளில் இழப்பீடு வழங்குவதற்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என மதுரை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இழப்பீடு கேட்டு வழக்கு

மதுரையை சேர்ந்த திருநாவுக்கரசு, கடந்த 2021-ம் ஆண்டில் அரசு பஸ் மோதி இறந்தார். இதை எடுத்து அவரது இறப்புக்கு இழப்பீடு கேட்டு அவரது மனைவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, திருநாவுக்கரசு மனைவிக்கு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் ரூ.13.55 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது விபத்து இழப்பீடுகளுக்காக எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எவ்வளவு தொகை வழங்க வேண்டிய உள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டணத்தில் குறிப்பிட்ட தொகை இழப்பீட்டிற்காகவும் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 20.1.2018 முதல் 31.3.2023 வரை ரூ.2,247.70 கோடி வசூலிக்கப்பட்டது. இதில் ரூ.953.21 கோடி இழப்பீடாகவும், டோல்கேட் கட்டணமாக ரூ.814.08 கோடியும் செலுத்தப்பட்டது. ரூ.681.81 கோடி மீதம் உள்ளது. ரூ.615.73 கோடி இன்னும் இழப்பீடாக வழங்க வேண்டியுள்ளது என கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, இழப்பீட்டிற்காக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை பிற பயன்பாட்டிற்கோ, பயன்படுத்தாமலோ இருப்பதை ஏற்க முடியாது. இழப்பீட்டிற்கான பணத்தை ஏன் வழங்கவில்லை என்பது குறித்து போக்குவரத்து கழக செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டார் விசாரணையை ஜூன் மாதம் 12- ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Next Story