ராக்கெட் ஏவுதளம் பணிக்காக கூடல்நகர் கிராம மக்களுக்கான மறுகுடியமர்வு இடத்தை கலெக்டர் ஆய்வு


ராக்கெட் ஏவுதளம் பணிக்காக  கூடல்நகர் கிராம மக்களுக்கான மறுகுடியமர்வு இடத்தை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராக்கெட் ஏவுதளம் பணிக்காக கூடல்நகர் கிராம மக்களுக்கான மறுகுடியமர்வு இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைய இருப்பதையொட்டி கூடல்நகர் கிராம மக்களுக்கு மறுகுடியமர்வுக்கான இடத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

ராக்கெட் ஏவுதளம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டோவிற்கு அடுத்தபடியாக பூமத்திய ரேகைக்கு மிக அருகில் இருக்கும் குலசேகரன்பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதுடன், எல்லைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து முடியும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில் ஏராளமான அரசு, புறம்போக்கு, தனியாருக்கு சொந்தமான இடங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் அந்தந்த நில உரிமையாளர்களுக்கு அவர்கள் இடங்களில் இருக்கும் மரங்களை பொறுத்து இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான இடங்கள் கையகப்படுத்தப்பட்டாலும் கூடல்நகர் என்ற கிராமம் மட்டுமே முழுமையாக காலி செய்யப்பட்டு அந்த பகுதி மக்கள் மறுகுடியமர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அந்த கிராமத்தைச் சேர்ந்த 37 குடியிருப்பாளர்களுக்கு சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் மறுகுடியமர்வு செய்ய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட செட்டியாபத்து ஊராட்சி அய்யாநகர் பகுதியில் கூடல்நகர் பகுதி மக்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டு மறுகுடியமர்வுக்கு முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆய்வு

அதற்குரிய இடத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் இஸ்ரோ அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மறுகுடியமர்வுக்கான வரைபடத்தை அதிகாரிகள் வழங்கினர். தொடர்ந்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story