1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின
தூத்துக்குடி மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதன்கிழமை வகுப்புகள் தொடங்கின.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு ஆசிரியைகள் பன்னீர் தெளித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
பள்ளிக்கூடங்கள்
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதம் 1-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிக்கூடங்கள் திறப்பு தள்ளிப்போனது. அதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 12-ந் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 14-ந் தேதியும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 12-ந் தேதி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கின. நேற்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன.
திறப்பு
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் சுத்தம் செய்யும் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. நேற்று காலையில் பள்ளிக்கூடங்களுக்கு மாணவ, மாணவிகளின் பெற்றோர் ஆர்வத்துடன் அனுப்பி வைத்தனர். பள்ளிக்கூடத்துக்கு வந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு அரசின் இலவச பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சி.வ. தொடக்கப்பள்ளிக்கூடத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு உள்ள மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாடப்புத்தகம், நோட்டு புத்தகம் ஆகியவற்றை வழங்கினார்.