பேரிலோவன்பட்டியில் பாதிக்கப்பட்டவிவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க கோரிக்கை


தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பேரிலோவன்பட்டியில் பாதிக்கப்பட்டவிவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

பேரிலோவன்பட்டியில் வறட்சியால் பயிர்கள் கருகி உள்ளதால், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காய்ந்த பயிர்களுடன் வந்து மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.

பயிர்கள் கருகிவிட்டன

எட்டயபுரம் தாலுகா பேரிலோன்பட்டி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் காளி ராஜன் தலைமையில் விவசாயிகள் கொடுத்த மனுவில், எங்கள் பஞ்சாயத்தில் 850 எக்டேர் பரப்பில் மானாவாரி விவசாயம் செய்து உள்ளோம். நடப்பு ஆண்டில் பருவமழை பொய்த்து போனதால், அனைத்து விவசாய பயிர்களும் கருகி சேதமடைந்துவிட்டன. அதிகாரிகள் எங்கள் பகுதியில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேணடும். பயிர் காப்பீடும் செய்து உள்ளோம். ஆகையால் காப்பீடு தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி உள்ளனர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆதித்தமிழர் கட்சி தென் மண்டல செயலாளர் நம்பிராஜ் பாண்டியன் தலைமையில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தாறு ஆகிய தாலுகாவுக்கு உட்பட்ட ஊத்தப்பட்டி, அச்சங்குளம், செவல்பட்டி, தீத்தம்பட்டி, கோவத்தாம்பட்டி, புங்கவர் நத்தம், காமநாயக்கன்பட்டி, இலுப்பையூரணி, படர்ந்த புளி, துரைசாமிபுரம், வடக்கு வண்டானம், கழுகுமலை ஆகிய கிராமங்களில் அருந்ததியர் சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அந்த நிலத்தை வேறு சில தனிநபர்கள் ஆக்கிரமித்து வீடு கட்டி விற்பனை செய்து உள்ளனர். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது. கோர்ட்டு தீர்ப்பை நடைமுறைப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி, அவர்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.


Next Story