வரும் கல்வி ஆண்டுக்காகமாணவர் சேர்க்கை பிரசாரத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியைகள்
வரும் கல்வி ஆண்டுக்காக மாணவர் சேர்க்கை பிரசாரத்தில் அரசு பள்ளி ஆசிரியைகள் ஈடுபட்டனா்.
அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை கடந்த 17-ந்தேதி தொடங்கியது. தங்கள் பள்ளிக்கு உள்பட்ட மாணவ- மாணவிகளை அரசு பள்ளிக்கூடங்களில் சேர்க்கவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது.
இதையொட்டி ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூட ஆசிரியைகள் மாணவர் சேர்க்கை பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஸ்டோனி பாலம் அண்ணாநகர் மற்றும் சாந்தான் கருக்கு, கிராமடை மற்றும் சூரம்பட்டி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு ஆசிரியைகள் வீடுவீடாக சென்று அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
இதுகுறித்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கே.சுமதி கூறியதாவது:-
அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரசு ஏராளமான சலுகைகளை வழங்கிவருகிறது. கல்வி ஊக்கத்தொகை, உயர் கல்விகளில் இடஒதுக்கீடு என எதிர்கால திட்டத்துடன் மாணவ-மாணவிகளை அரசு தயார் செய்து வருகிறது. கல்வித்துறை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் நாங்கள் எங்கள் பள்ளிக்கூடத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வீடு வீடாக பிரசாரம் மேற்கொண்டோம்.
எங்கள் பள்ளிக்கூடத்தில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் சிறந்த முறையில் நடந்து வருகிறது. எங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகள் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை நடத்திய கலைத்திருவிழா உள்ளிட்ட போட்டிகளில் மாநில அளவில் பங்கேற்று சிறப்பித்து இருக்கிறார்கள். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு தேர்வு பெற்ற மாணவரும் உள்ளார். இதுபோன்று மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வருவதாக அரசு பள்ளிக்கூடங்கள் இருப்பதை பொதுமக்களிடம் கூறி சேர்க்கை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.