சிறுமி ஹாசினி உயிரிழப்புக்கு பேரூராட்சியின் அலட்சியமே காரணம் - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
சிறுமி ஹாசினி உயிரிழப்புக்கு பேரூராட்சியின் அலட்சியமே காரணம் என்று ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்த 8 வயது சிறுமி ஹாசினி ராணி இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பூங்கா அமைப்பதற்காக நீண்ட நாட்களுக்கு முன்பு தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாததே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், சிறுமி ஹாசினி உயிரிழப்புக்கு பேரூராட்சியின் அலட்சியமே காரணம் என்று ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
தேனி மாவட்டம், ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் பூங்காக்கள் அமைப்பதற்காக வெகு நாட்களுக்கு முன்பு தோண்டப்பட்ட குழி மூடப்படாததன் காரணமாக, கழிவறை வசதி இல்லாததால், இயற்கை உபாதைக்கு அங்கு சென்ற சிறுமி ஹாசினி மழைநீர் நிரம்பியிருந்த குழியில் தவறி விழுந்து உஉயிரிழந்த செய்தியறிந்து, ஆற்றொணாத் துயரமும், மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறுமியின் உயிரிழப்புக்கு பேரூராட்சி நிர்வாகமே காரணம் என்பதால் உயிரிழந்த சிறுமி ஹாசினியின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குமாறும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்குமாறும், இதுபோன்ற சம்பவம் இனி நடக்காதவாறு பார்த்துக் கொள்ளுமாறும் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.