வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்காக வைக்கப்பட்ட இடுபொருட்கள்
தரங்கம்பாடி தாலுகாவில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் வேளாண்துறை சார்பில் வைக்கப்பட்ட இடுபொருட்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டார்.
பொறையாறு:
தரங்கம்பாடி தாலுகாவில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் வேளாண்துறை சார்பில் வைக்கப்பட்ட இடுபொருட்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டார்.
வருவாய் தீர்வாய நிகழ்ச்சி
தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி எனும் வருவாய் தீர்வாய நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட கஞ்சாநகரம், லட்சுமிநாராயணபுரம், மேலையூர், கருவாழக்கரை, கீழையூர், நடுக்கரை மேல்பாதி, நடுக்கரை கீழ்பாதி, கிடாரங்கொண்டான், தலையுடையவர் கோவில் பத்து, மேலபெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம் ஆகிய வருவாய் கிராமங்களின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டது.
தொடர்ந்து மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம் மற்றும் திருத்தம், வேலைவாய்ப்பு, குடிமைப்பொருட்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 63 மனுக்கள் பெறப்பட்டன.
வேளாண் இடுபொருட்கள்
அதனை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். முன்னதாக மாவட்ட கலெக்டர், தாலுகா அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பிறகு வேளாண்மை துறை சார்பில் வைக்கப்பட்ட விவசாயிகளுக்கான மானிய விலை இடுபொருட்களை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் நரேந்திரன் (பொது), ஜெயபாலன் (வேளாண்மை), தரங்கம்பாடி தாசில்தார் சரவணன், வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையா, தரங்கம்பாடி தாலுகா மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், தலைமையிடத்து துணை தாசில்தார் தேவகி, தனி தாசில்தார் சுந்தரி (சமூக பாதுகாப்பு), தனி தாசில்தார் நாகலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார், தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் அன்புசெல்வன், தீயணைப்பு நிலைய அலுவலர் அருண்மொழி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.