முதல்போக சாகுபடிக்காக நாற்று நடும் பணி தீவிரம்
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக பாசனத்துக்காக நாற்று நடும் பணி தீவிரமாக நடக்கிறது
தேனி மாவட்டம் லோயர்கேம்பில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை முல்லைப்பெரியாறு அணை மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. இந்த பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல்போக சாகுபடி நடைபெறுவது வழக்கம்,. அதன்படி இந்த ஆண்டு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் முதல்போக சாகுபடி பணிகள் நடைபெறுகிறது.
இதையடுத்து கம்பம் பள்ளதாக்கு பகுதியான கம்பம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் முதல்போக சாகுபடிக்காக நிலத்தை டிராக்டர்கள் மூலம் உழுது தயார்படுத்தி நாற்றங்கால் அமைத்தனர். தற்போது நாற்றங்காலில் இருந்து நாற்றுகளை பிடுங்கி வயல்களில் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு பருவநிலைக்கு தகுந்தாற்போல் முதல் போக சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளதால் நல்ல மகசூல் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.