75 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கம்
75 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டதால் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சாயல்குடி
75 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டதால் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரசு பஸ்
சாயல்குடி அருகே கீழச்செல்வனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டையேந்தல் கிராமத்தில் விவசாய கூலி தொழிலாளர்கள் உள்ளனர். இங்குள்ள பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டுமானால் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழச்செல்வனூர் பஸ் நிறுத்தத்திற்கு வந்து தான் பஸ் ஏற வேண்டும். இதையடுத்து கீழச்செல்வனூர் ஊராட்சித் தலைவர் இக்பால், இந்த கிராமத்திற்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து அவர் இக்கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரக்கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று கோட்டையேந்தல் கிராமத்திற்கு சாயல்குடியில் இருந்து கோட்டையேந்தல் வழியாக வாலிநோக்கத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பின்னர் கிராமத்திற்கு வந்த பஸ்சை கிராம மக்கள் திரண்டு வரவேற்றனர். பஸ் டிரைவர் மற்றும் நடத்துனருக்கு மாலை அணிவித்தனர். மேலும் பஸ்சின் முன்பு தேங்காய் உடைத்து சூடம் காண்பித்து மக்கள் வரவேற்றனர்.
வரவேற்றனர்
அதேபோல் சாயல்குடி அருகே மாரியூர் ஊராட்சி மடத்தாக்குளம் கிராமத்திற்கு பஸ் வசதி கேட்டு முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் மாரியூர் ஊராட்சி தலைவர் கன்னியம்மாள் மற்றும் கிராமமக்கள் மனு அளித்தனர். இதையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவுபடி நேற்று சாயல்குடியில் இருந்து பெரியகுளம், கிருஷ்ணாபுரம் வழியாக மடத்தாக்குளம் கிராமத்திற்கு வந்த பஸ்சை கிராம மக்கள் திரண்டு வரவேற்றனர். மேலும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியின் போது தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜெயபாலன், ஆப்பனூர் ஆறுமுகவேல், குலாம் முகைதீன், சாயல்குடி நீர்பாசன சங்க தலைவர் ராஜாராம், முதுகுளத்தூர் போக்குவரத்து மேலாளர் அறிவரசன், ஊராட்சித் தலைவர்கள் இக்பால், கன்னியம்மாள் சண்முகவேல், தென்னரசி செல்ல பாண்டியன், ராஜேந்திரன் சீதா நாகராஜன், முன்னாள் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், பரக்கத் ஆயிஷா, சைபுதீன், முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.