தீயணைப்புத்துறையில் தகுதியுள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை டி.ஜி.பி. ரவி தகவல்
தீயணைப்புத்துறையில் தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த துறையின் டி.ஜி.பி.ரவி தெரிவித்துள்ளார்.
சேலம்,
டி.ஜி.பி. ரவி ஆய்வு
தமிழகத்தில் உள்ள தீயணைப்பு பயிற்சி மையங்களில் தீயணைப்புத்துறை டி.ஜி.பி. ரவி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் நேற்று சேலம் கொண்டலாம்பட்டி அருகே பயிற்சி மையத்தில் ஆய்வு செய்தார். அப்போது அவர் தீயணைப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து தீயணைப்புத்துறை டி.ஜி.பி.ரவி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 9 இடங்களில் உள்ள தீயணைப்பு பயிற்சி மையங்களில் அளிக்கப்படும் பயிற்சி மையங்களில் ஆய்வு செய்து வருகிறேன். அதன்படி, சேலம் மையத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
டிரைவர்கள் பற்றாக்குறை
தீயணைப்பு துறையில் டிரைவர்கள் பற்றாக்குறை இருப்பது உண்மை தான். அந்த பணிக்கு யாரும் முன்வருவது இல்லை. எனவே, தற்போது பயிற்சி பெற்று வருபவர்களுக்கு கட்டாய டிரைவிங் பயிற்சி அளித்து ஓட்டுனர் உரிமம் பெற்று கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த குறை சரி செய்யப்பட்டுவிடும்.
அதேசமயம், தீயணைப்புத்துறையில் பதவி உயர்வு காலதாமதம் ஆவதாக சொல்வது உண்மைக்கு புறம்பானது. தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உபகரணங்களை கையாள்வதற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த பயிற்சிகள் மேம்படுத்தப்படும். தீயணைப்புத்துறை வீரர்களுக்கு கூடுதல் உபகரணங்கள், கருவிகள் வாங்குவது தொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடந்த ஆய்வின்போது, தீயணைப்புத்துறை இணை இயக்குனர் சத்திய நாராயணன், சேலம் மாவட்ட தீ தடுப்பு அலுவலரும், பயிற்சி மையத்தின் முதல்வருமான வேலு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.