சம்பந்தம் இல்லாதவர்களுக்கு பத்திரப்பதிவு ஆவண நகல்களை வழங்கக்கூடாது சென்னிமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் மனு
சம்பந்தம் இல்லாதவர்களுக்கு பத்திரப்பதிவு ஆவண நகல்களை வழங்கக்கூடாது சென்னிமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் மனு அளித்தனா்.
சம்பந்தம் இல்லாதவர்களுக்கு பத்திரப்பதிவு ஆவண நகல்களை வழங்கக்கூடாது என்று சென்னிமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் மனு அளித்தனர்.
ஆவண பதிவுகள்
சென்னிமலையில் உள்ள ஈங்கூர் ரோட்டில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஒன்றியத்துக்குட்பட்ட சில ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களும் பத்திரப்பதிவு, அடமானம் உள்ளிட்ட பல்வேறு ஆவண பதிவுகளை செய்து வருகின்றனர். விசேஷ நாட்களில் இந்த அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆவண பதிவுகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பத்திரங்கள் சம்பந்தமான ஆவணங்கள், ஆவணங்களின் உத்தரவுகள், ஆவணங்களில் உள்ள சான்றுகள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆகியவற்றை சில நபர்கள் நேரடியாக சார்பதிவாளர் அலுவலக பணியாளர்களை மிரட்டியும், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டும் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டதுடன், ஆவண பதிவுகளுக்கு வந்தவர்களும் சிரமப்பட்டதாக தெரிகிறது.
வழங்க கூடாது
இந்த நிலையில் சென்னிமலை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் கே.பன்னீர்செல்வம், பேரூராட்சி துணைத்தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன், வக்கீல் பி.சி.அர்ச்சுணன் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திரண்டு வந்து சார்பதிவாளர் சரோஜாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், 'சம்பந்தமில்லாத நபர்கள் யாராவது நேரடியாகவோ அல்லது தகவல் உரிமை சட்டத்தின் மூலமோ ஆவணங்களின் நகல், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆகியவற்றை கேட்டால் வழங்க கூடாது,' என குறிப்பிட்டிருந்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சார்பதிவாளர் சரோஜா தெரிவித்தார். இதில் அனைத்து கட்சியினர் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சென்னிமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.