சிறந்த அலங்காரம் அமைத்தவர்களுக்கு சுழல் கோப்பைகள்


சிறந்த அலங்காரம் அமைத்தவர்களுக்கு  சுழல் கோப்பைகள்
x

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடந்த பழக்கண்காட்சி நிறைவு விழாவில் சிறந்த அலங்காரம் அமைத்தவர்களுக்கு சுழல் கோப்பைகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடந்த பழக்கண்காட்சி நிறைவு விழாவில் சிறந்த அலங்காரம் அமைத்தவர்களுக்கு சுழல் கோப்பைகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

பழக்கண்காட்சி

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா கடந்த 7-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62-வது பழக்கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. கண்காட்சியையொட்டி பூங்கா நுழைவுவாயில் பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பிற மாவட்டங்களில் விளையும் பழங்களை கொண்டு அரங்குகள் அமைக்கப்பட்டது. குறிப்பாக 1 டன் திராட்சை பழங்களை கொண்டு 12 அடி நீளம், 9 அடி உயரத்தில் கழுகு அலங்காரம் உருவாக்கப்பட்டு இருந்தது. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.

மேலும் சுற்றுலா பயணிகள், குழந்தைகளை கவரும் வகையில் பல்வேறு வகையான பழங்களை கொண்டு தேன்‌ வண்டு, பாண்டா கரடி போன்ற அலங்காரங்கள் இடம் பெற்றது. மீண்டும்‌ மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ மஞ்சப்பை வடிவம் மற்றும் ஊட்டியை உருவாகி 200 ஆண்டு ஆவதை குறிக்கும் வகையில்‌ ஊட்டி-200 என்று பழங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்தது. பழங்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு அலங் காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

சுழல் கோப்பைகள்

பழக்கண்காட்சியின் கடைசி நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. பழங்களால் ஆன டிராகன், மயில், தாஜ்மஹால், புலி உள்பட பல்வேறு அலங்காரங்களை பார்வையிட்டனர். மேலும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் காட்சிக்கு வைக்கப்பட்ட வனப்பகுதியில் கிடைக்கும் அரிய வகை பழங்களை பார்வையிட்டனர். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் கண்காட்சியை கண்டு ரசித்தனர். தோட்டக்கலை மூலம் நடந்த கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.

இந்தநிலையில் நிறைவு நாளான நேற்று பழக்கண்காட்சி போட்டியில் சிறந்த அலங்காரங்களை அமைத்தவர்களுக்கு சுழல் கோப்பை வழங்கும் விழா பூங்காவில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி சிறந்த அலங்காரம் அமைத்தவர்களுக்கு சுழல் கோப்பை உள்பட 102 பேருக்கு கோப்பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தோட்டக்கலை இணை இயக்குனர் ஷிபிலா மேரி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் ராதாகிருஷ்ணன், நந்தினி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story