திறப்பு விழா கண்ட பிறகும் பயன்பாட்டுக்கு வராத மருத்துவக்கல்லூரி 'ஆஸ்பத்திரி'


திறப்பு விழா கண்ட பிறகும் பயன்பாட்டுக்கு  வராத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி
x

நாகை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி கட்டிடம் திறப்பு விழா கண்ட பிறகும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இங்கு உள்கட்டமைப்பு பணிகள் நிறைவு பெறுமா? என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நாகப்பட்டினம்

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்து பிரித்து, 1991-ம் ஆண்டில் புதிய மாவட்டமாக நாகை உருவாக்கப்பட்டது. அதிகளவில் இயற்கை சீற்றத்துக்கு உள்ளாகும் பகுதியாக நாகை மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அவசர மற்றும் உயர் மருத்துவ சிகிச்சைகளுக்கு தஞ்சை, புதுச்சேரி, சென்னை போன்ற பெரு நகரங்களை நாடி செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

இதனை கருத்தில் கொண்டு, நாகை அருகே ஒரத்தூரில் 30 ஏக்கர் பரப்பளவில், ரூ.366.85 கோடி மதிப்பில் மருத்துவக்கல்லூரியுடன் கூடிய ஆஸ்பத்திரி கட்டப்பட்டது. மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 7 தளங்களுடன், 700 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டன.

அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, ரத்தவங்கி, மருத்துவக்கிடங்கு, பல் மருத்துவமனை பிரிவு, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு, ஆய்வகம், நவீன சமையலறை என பல்வேறு வசதிகள் இங்கு உள்ளன.

பிரதமர் திறந்து வைத்தார்

மேலும் மருத்துவக்கல்லூரி வளாகமும் 7 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உடற்கூறு இயல் பிரிவு, உடலியல் பிரிவு, மருத்துவப்பிரிவு, நோய் கிருமி ஆராய்ச்சி பிரிவு, நுண்ணுயிரியல் பிரிவு மற்றும் தடயவியல் பிரிவு, மருந்தியல் பிரிவு மற்றும் 800 இருக்கைகள் கொண்ட கூட்ட அரங்கம் உள்ளது.

நாகை புதிய மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரியை கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதில் மருத்துவக்கல்லூரி மற்றும் விடுதி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். மருத்துவக்கல்லூரியில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் தற்போது வகுப்புகள் நடந்து வருகிறது. கல்லூரி விடுதியிலும் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

புதிய ஆஸ்பத்திரி கட்டிடம்

தஞ்சை, திருவாரூர் ஆகிய இடங்களில் மருத்துவக்கல்லூரி வளாகத்திலேயே ஆஸ்பத்திரியும் இயங்கி வருகிறது. நாகை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் ஆஸ்பத்திரி கட்டப்பட்டு, அது திறப்பு விழா கண்ட பிறகும், இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.

புதிய ஆஸ்பத்திரி கட்டிடத்தில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் இதுவரை முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் நாகை அரசு பொது ஆஸ்பத்திரியில் உள்ள பழைய கட்டிடங்களிலேயே மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இதனால் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரி கட்டிடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிப்படை வசதிகள் பற்றாக்குறை

இதுகுறித்து மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கணேசன் கூறுகையில், 'நாகை அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு 10 மாதங்கள் ஆகியும் ஆஸ்பத்திரி இயங்கவில்லை. இதற்கு பதிலாக நாகையில் உள்ள அரசு தலைமை ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் நோயாளிகள் மட்டும் இன்றி, டாக்டர்கள், ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

திறப்பு விழா கண்டு, பல மாதங்களுக்கு மேலாகியும் ஆஸ்பத்திரி கட்டிடத்தை பொதுப்பணித்துறையினர் இதுவரை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். ஆஸ்பத்திரியில் உள்கட்டமைப்பு பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story