மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60¾ கோடி கடனுதவி:அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60¾ கோடி கடனுதவியை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் 917 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60¾ கோடி கடன் உதவியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
கடன் உதவி
தமிழகம் முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்குதல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார்.
ரூ.60¾ கோடி
சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு தூத்துக்குடிமாவட்டத்தில் நகர்புறம் மற்றும் கிராமப்புறபகுதிகளில் உள்ள 849 சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகடன் ரூ.54.93 கோடியும், 8 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.4.74 கோடி வங்கி பெருங்கடனும், 27 சுய உதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.40.50 லட்சமும் மற்றும் வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் மூலம் 33 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.63 லட்சம் உள்பட மொத்தம் 917 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60.70 கோடி கடன் உதவியை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அ.பிரம்மசக்தி, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் வீரபத்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எட்டயபுரம்
மேலும், எட்டயபுரம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே அன்பழகன் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா தெருமுனை பிரசாரக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு விளாத்திகுளம் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் தலைமை தாங்கினார். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணி தாய்மார்கள் அனைவரும் சத்தான உணவுகளையும், பழ வகைகளையும் கட்டாயம் சாப்பிட வேண்டும். தமிழகத்தில் ஏராளமான வட இந்தியர்கள் வேலைபெற்று வந்தனர். இன்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். தமிழ் படித்த இளைஞர்களுக்கு மட்டும் தான் தமிழகத்தில் வேலை என்று சட்ட திருத்தம் ெகாண்டு வந்துள்ளார். அதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு வேலைகள் நமது இளைஞர்களுக்கு கிடைத்து வருகிறது, என்றார். கூட்டத்தில் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன் ராஜ், விளாத்திகுளம் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மஞ்சுளா, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மருதவல்லி உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து எட்டயபுரம் அருகே உள்ள சிவஞானபுரம் பஸ் நிறுத்தம் அருகே நடந்த தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக பசும்பொன் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.