விளையாட்டு மீது இளைஞர்களுக்குஆர்வம் இருக்கிறதா? குறைந்து வருகிறதா?
இளைஞர்கள் எந்த அளவில் விளையாட்டுகளில் ஆர்வம் காண்பிக்கின்றனர் என்பது குறித்து சர்வதேச விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதுபற்றிய விவரங்களைக் காண்போம்.
ஒன்றைச் சொல்லிவிட்டு, ''விளையாட்டுக்குச் சொன்னேன். பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!'' என்று சிலர் சொல்வதை நாம் கேள்விப்பட்டு இருக்கலாம்.
இங்கே விளையாட்டு என்ற சொல் 'பொருட்படுத்தத் தேவையில்லை' என்ற பொருளில் வருகிறது. இன்றைய இளைஞர்கள் பலரும் விளையாட்டை அவ்வாறே பொருட்படுத்தத் தேவையில்லாத ஒரு செயலாகவே ஒதுக்கி விடுகிறார்கள்.
காரணம், அவர்களின் விளையாட்டு நேரங்களை நவீன தொழில்நுட்பங்கள் பறித்துக்கொள்கின்றன என்றே சொல்ல வேண்டும்.
சாதிக்க முடியும்
கம்ப்யூட்டர், செல்போன் என்று எந்திரங்களில் மூழ்கி கிடக்கும் அவர்கள், உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் சோர்வடைந்து வருகிறார்கள்.
சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். இளைஞர்கள் அதை உணர வேண்டும். மாணவர்கள் விளையாட்டை வெறும் விளையாட்டாக கருதிவிடக் கூடாது. உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் சேர்ப்பது விளையாட்டு. எனவே விளையாட்டை ஒரு பாடமாக நினைத்து படித்துக்கொள்ள வேண்டும்; பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் எந்த அளவில் விளையாட்டுகளில் ஆர்வம் காண்பிக்கின்றனர் என்பது குறித்து சர்வதேச விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதுபற்றிய விவரங்களைக் காண்போம்.
கைப்பந்து வீரர் பி.ஜெகதீசன்
இதுகுறித்து சர்வதேச கைப்பந்து வீரரும், நெல்லை நண்பர்கள் கைப்பந்து கழகம் மற்றும் டாக்டர் சிவந்தி கைப்பந்து கழகம் செயலாளருமான பி.ஜெகதீசன் கூறும் போது, 'சென்னையில் கடந்த 1986-ம் ஆண்டு டாக்டர் சிவந்தி ஆதித்தன் பெயரில், அவரின் தொடர் உதவியுடன் ''டாக்டர் சிவந்தி கிளப்'' என்ற பெண்களுக்கான கைப்பந்து அணி தொடங்கப்பட்டு அதன் மூலம் பல பெண்கள் இலவச கைப்பந்து பயிற்சி பெற்று பல மாநில, தேசிய, மற்றும் சர்வதேச அளவில் பல போட்டிகளில் கலந்துகொண்டு உள்ளனர். இவர்கள் பல அரசு துறைகளில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். 2013-ம் ஆண்டு முதல் பள்ளி அளவில் உள்ள வசதியற்ற பெண் பிள்ளைகளுக்கு பயிற்சி அளித்து புதிய பல வீராங்கனைகளை உருவாக்கி வருகிறோம். இந்த விளையாட்டு அரங்கில் கைப்பந்து, கபடி மட்டுமின்றி, ஹாக்கி, கூடைப்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் பயிற்சி பெற்று வந்தனர். 2000-ம் ஆண்டிற்கு பிறகு மாணவர்களின் செல்போன் மோகம், பள்ளிகளின் தேர்ச்சி விகித எதிர்பார்ப்பாக பெரும்பாலான பள்ளிகளின் விளையாட்டு வகுப்புகளுக்கு அனுமதியின்மை. பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாமை, பெற்றோர்களிடம் விளையாட்டின் மீதான ஆர்வமின்மை போன்ற பல காரணங்களால் இருக்கின்ற விளையாட்டு அரங்கங்களும் பயிற்சி பெற மாணவர்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன.
கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு போட்டிகள் நடத்துவதற்கு பல நிறுவனங்கள் உதவி செய்வதை நிறுத்தி விட்டன. இதனால் போட்டிகள் நடத்த முடிவதில்லை. நாம் சர்வதேச அளவில் ஜொலிக்க முடியாமல் போகிறது' என்றார்.
ஷைனி வில்சன்
கடந்த 1981-ம் ஆண்டில் இருந்து 1996-ம் ஆண்டு வரை 4 ஒலிம்பிக் போட்டிகள் உள்பட 75 சர்வதேச தடகள போட்டிகளில் கலந்து கொண்டு 80-க்கும் அதிகமான விருதுகளை பெற்ற ஒரே பெண் என்ற பெருமையை கொண்டவரும், சென்னையில் உள்ள இந்திய உணவு கழகத்தின் தென்மண்டல பொதுமேலாளருமான ஷைனி வில்சன் கூறும் போது, 'மத்திய, மாநில அரசுகள் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு விளையாட்டுத்துறையை மேம்படுத்த பள்ளி, மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஊக்குவித்து வருகிறது. விளையாட்டில் இளைஞர்கள் ஆர்வம் காண்பித்தாலும் அது போதுமானதாக இல்லை. இன்னும் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் காண்பிக்க வேண்டும். ஒலிம்பிக் சங்க தலைவராக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பொறுப்பேற்ற பிறகு அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் போட்டிகளில் பங்கேற்றதுடன், சர்வதேச அளவிலும் விருதுகளையும் குவித்தனர். தற்போது விளையாட்டு வீரர்களுக்கு அரசு செய்து தரும் வசதிகளை பயன்படுத்தி அதிகம் பேர் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு சர்வதேச அளவில் சாதனை படைக்க முன்வர வேண்டும். சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள நான் செல்லும்போது இப்போது இருப்பது போன்ற வசதிகள் எதுவும் பெரிதாக கிடையாது. ஆனால் தற்போது அரசுகள் விளையாட்டு வீரர்களுக்கு அதிக வசதிகள் செய்து தருவதால் அதனை பயன்படுத்தி சர்வதேச அளவில் இந்தியாவிற்கு விளையாட்டு துறையில் மேலும் நல்ல பெயரை பெற்றுதர இன்னும் அதிகமான இளைஞர்கள் முன்னுக்கு வர வேண்டும்' என்றார்.
கபடி பயிற்சியாளர் என்.ஜெயராஜ்
இந்திய விளையாட்டு ஆணையத்தின் சீனியர் கபடி பயிற்சியாளர் (ஓய்வு) என்.ஜெயராஜ் கூறும் போது, 'கிரிக்கெட் விளையாட்டில்தான் இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகம் உள்ளது. தற்போது இளைஞர்களுக்கு படிப்படியாக அனைத்து விளையாட்டுகளிலும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதற்கு ஊடகங்களின் பங்கும் அதிகம் உள்ளது. அதேபோல் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிலம்பம் கற்றுத்தரப்படுகிறது. அதேபோல் கபடி விளையாட்டுகளிலும் இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இதில் இளைஞர்கள் அதிகம் பேர் வந்து கலந்து கொள்கின்றனர். பள்ளிகளில் விளையாட்டு மைதானம் அதிகம் இருப்பதால் இளைஞர்கள் பள்ளிகளில் அதிகளவில் விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். மாறாக வீடுகள் அருகில் பொது இடங்களில் விளையாட்டு மைதானம் இல்லாததால் மாலை நேரங்களில் இளைஞர்கள் பெரிய அளவில் விளையாட்டுகளில் கலந்து கொள்வதில்லை. எனவே பொது இடங்களிலும் விளையாட்டு மைதானங்களை அமைக்க வேண்டும்' என்றார்.
வாழ்வாதாரத்தை நிறைவேற்றுங்கள்
இந்திய கபடி அணியின் முன்னாள் பயிற்சியாளர் பாஸ்கரன் (வத்தலக்குண்டு):- தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் இளைஞர்களின் ஆர்வம் கூடியிருக்கிறது. ஆனால் வாழ்வாதாரம் நிறைவடையாததால் பலஇளைஞர்களிடம் விரக்தி நிலவுகிறது. திறமை உள்ள இளைஞர்களின் வாழ்வாதாரத்தை அரசு உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் விளையாட்டு துறையில் ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படும். சில இளைஞர்களை செல்போன்கள் தவறான பாதைக்கு கொண்டு செல்கிறது. அதனால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு விளையாட்டு துறையில் சற்று ஆர்வம் குறைவது ஓரளவு உண்மை தான். எனவே செல்போனை இளைஞர்கள் தகவல் பரிமாற்றம் போன்ற நல்ல காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அரியானா மாநில அரசு திறமையுள்ள இளைஞர்களின் வாழ்வாதாரத்தை 90 சதவீதம் நிறைவேற்றி உள்ளது. அதேபோல தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் திறமையுள்ள இளைஞர்களுக்கு உரிய வாழ்வாதாரத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் ஏராளமான இளைஞர்கள் விளையாட்டில் சாதனை படைப்பார்கள், என்றார்.
ஆர்வம்-விழிப்புணர்வு
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமாமேரி:- முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இளைஞர்கள், மாணவர்கள் ஆர்வமுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர். அதன்மூலம் விளையாட்டு மீதான ஆர்வம், விழிப்புணர்வு இளைஞர்களிடம் நிறைய இருப்பது தெரியவருகிறது. விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு என்ஜினீரியங் உள்ளிட்ட கல்வி, அரசு பணிகளில் இடஒதுக்கீடு இருக்கிறது. எனவே மாணவர்கள், இளைஞர்கள் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு அமைப்புகள் நடத்தும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அதன்மூலம் கிடைக்கும் சான்றிதழ்களே வாழ்க்கைக்கு பயனுள்ளதாக அமையும். விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் சமயோசித புத்தியோடு செயல்படுவார்கள். எனவே குழந்தைகளை அவர்களுக்கு பிடித்த விளையாட்டில் பெற்றோர் ஈடுபட வைக்க வேண்டும். பள்ளிகளில் விளையாட்டு பாடவேளையில் மாணவர்களை விளையாட வைக்க வேண்டும்.
ஒழுக்கமான இளைய சமுதாயம்
குடும்பத் தலைவி அழகம்மாள் (சேத்தூர்) :- இளைஞர்கள் செல்போனில் மூழ்கி இருந்தாலும் விளையாட்டிலும் ஆர்வமாக தான் இருக்கின்றனர். ஆனால் கல்வியில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக மாணவ பருவத்தில் சரியாக விளையாட அனுமதிப்பது இல்லை. மாணவ பருவத்தில் விளையாட அனுமதித்தால் தான் உடல் வலிமையாக இருக்கும். இளைஞன் ஆனதும் விளையாட்டு, உடல்நலனில் அக்கறையோடு இருப்பார்கள். தீய பழக்கங்களுக்கு அடிமையாக மாட்டார்கள். குழந்தை பருவத்தில் இருந்தே கல்வியோடு, விருப்பமுள்ள விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும். தமிழக அரசு கல்வியை போன்று விளையாட்டு துறைக்கும் அதிக நிதியை ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கபடி என அனைத்து விளையாட்டுகளிலும் ஆர்வமுள்ள மாணவர்களை கண்டறிந்துஅரசு செலவில் படிக்க வைத்து பயிற்சி அளிக்க வேண்டும். இதனால் தமிழகம் விளையாட்டில் ஜொலிப்பதோடு, ஒழுக்கம் மற்றும் வலிமையான இளைஞர்களை உருவாக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.