யுவராஜ் உள்ளிட்டவர்களுக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரி மனு


யுவராஜ் உள்ளிட்டவர்களுக்கு   தண்டனையை உறுதி செய்யக்கோரி மனு
x

யுவராஜ் உள்ளிட்டவர்களுக்கு தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் கோகுல்ராஜ் தாயார் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை

யுவராஜ் உள்ளிட்டவர்களுக்கு தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் கோகுல்ராஜ் தாயார் மனு தாக்கல் செய்துள்ளார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கு

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த என்ஜினீயரான கோகுல்ராஜ், கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தாா். போலீஸ் விசாரணையில், அவர் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த வழக்கில் சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த கொலை வழக்கை மதுரை மாவட்ட கோர்ட்டு விசாரித்தது.முடிவில், யுவராஜ், அருண் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் உள்ளிட்ட 10 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேல்முறையீட்டு மனு

இந்தநிலையில் தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் தாயார் சித்ரா, மதுரை ஐகோர்ட்டில் ஒரு இடையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

தண்டனையை உறுதி செய்ய வேண்டும்

அந்த மனுவில், எனது மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது கொலை வழக்கில் ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்ட 10 பேரின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும். அப்பீல் மனுதாரர்களுக்கு விதித்த தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அடுத்த கட்ட விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Related Tags :
Next Story