ரூ.9¾ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
ரூ.9¾ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பட்டு:
அதிகாரிகள் சோதனை
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் சென்று வருகின்றன. இந்த விமானங்களில் அதிக அளவில் மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவது வாடிக்கையாக உள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு பயணிகளால் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று திருச்சியில் இருந்து மலிண்டோ விமானம் மலேசியா நோக்கி புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் சுங்கத்துறை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டு, விமானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வெளிநாட்டு பணம் பறிமுதல்
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் விமான நிலையத்தில் இருந்த பயணி ஒருவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் அவரிடம் ஆயிரம் பவுண்டுகள், ஆயிரம் மலேசியன் ரிங்கிட் ஆகிய வெளிநாட்டு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சுலைமான் சேட் என்பது தெரியவந்தது. மேலும் அவர் வெளிநாட்டிற்கு பணத்தை கடத்த முயன்றது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தின் இந்திய மதிப்பு ரூ.9 லட்சத்து 82 ஆயிரம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.