நாட்டின் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தும் வெளிநாட்டினரை நாடு திரும்ப அனுமதிக்க முடியாது; செஷல்ஸ் தூதர் வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
நாட்டின் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தும் பொருளாதார குற்றச்சாட்டில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை நாடு திரும்ப அனுமதிக்க முடியாது என்று செஷல்ஸ் நாட்டு தூதரின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தூதர்
செஷல்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவர் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் சி.சிவசங்கரன். இவர் அந்நாட்டின் தூதராகவும் உள்ளார். இவர் மீது பண மோசடி வழக்குகள் பல உள்ளன. இதையடுத்து இவரை தேடப்படும் நபராக மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் சென்னையில் உள்ள சிவசங்கரன், செஷல்ஸ் நாட்டுக்கு செல்ல அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வாதிட்ட வக்கீல் கூறியதாவது:-
மனுதாரர் செஷல்ஸ் தீவின் தூதராக உள்ளார். தூதருக்குரிய பாஸ்போர்ட்டுடன்தான் இந்தியா வந்துள்ளார். தொழில் அதிபராகவும் உள்ளார். தற்போது தேடப்படும் நபராக நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளதால், அவரால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியவில்லை. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்குகள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. தற்போது அவரது குடும்பத்தினர் சென்னையில்தான் வசிக்கின்றனர். அவர்கள் இந்திய குடிமக்கள்.
ரூ.600 கோடி இழப்பு
மனுதாரர் செஷல்ஸ் நாட்டுக்கு சென்று தூதர் பணியை அந்த நாட்டின் அரசிடம் ஒப்படைத்துவிட்டு இந்தியா திரும்ப அனுமதிக்க வேண்டும். உணவு தொடர்பான தொழில் தொடங்கவும், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுவரவும் அனுமதிக்க வேண்டும். மனுதாரர் ஒன்றும் தேடப்படும் குற்றவாளி இல்லை.
இவ்வாறு வாதிடப்பட்டது.
அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிட்டார். அவர் தன் வாதத்தில், 'மனுதாரரை வெளிநாடு செல்ல அனுமதித்தால், கண்டிப்பாக திரும்பி வரமாட்டார். தலைமறைவாகி விடுவார். மேலும், இவர் தூதராக பதவி ஏற்பதற்கு முன்பு, அதாவது 2006-ம் ஆண்டு வரை சிவா குரூப் ஆப் கம்பெனியின் இயக்குனராக இருந்துள்ளார். பின்னர், பின்லாந்து நாட்டின் நிறுனத்துக்கு ஐ.டி.பி.ஐ. வங்கியில் இருந்து பெரும் தொகை கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. இதனால் அந்த வங்கிக்கு சுமார் ரூ.600 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த மோசடி வழக்குகளில் மனுதாரருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதால், இவரை வெளிநாட்டுக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது' என்று வாதிட்டார்.
பல வழக்குகள்
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரர் நிவாரணம் கேட்டு 2-வது சுற்றாக இந்த ஐகோர்ட்டுக்கு வந்துள்ளார். ஏற்கனவே, அவரை தேடப்படும் நபராக அறிவித்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை இந்த ஐகோர்ட்டும், பின்னர் சுப்ரீம் கோர்ட்டும் தள்ளுபடி செய்துவிட்டன.
தற்போது அவர் செஷல்ஸ் நாட்டுக்கு சென்றுவர அனுமதி கோருகிறார். இந்த வழக்கு வேறு ஒன்றுமில்லை, புதிய பாட்டிலில் பழைய ஒயினை அடைப்பதுபோலத்தான் உள்ளது. பொதுவாக மிகப்பெரிய குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இதுபோல நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. மனுதாரருக்கு எதிரான பண பரிவர்த்தனை மோசடி வழக்குகள் புலன் விசாரணையில் உள்ளன. பல வழக்குகள் கோர்ட்டுகளில் விசாரணையில் உள்ளன. மனுதாரர் சென்னையைச் சேர்ந்தவர் என்றாலும், அதற்கு ஆதாரமாக நிரந்தர முகவரி விவரங்களைத் தரவில்லை.
ஒப்பந்தம் இல்லை
எனவே, நாட்டின் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தும் பொருளாதார குற்றச்சாட்டில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை நாடு திரும்ப அனுமதிக்க முடியாது. அதுமட்டுமல்ல, இந்தியாவுக்கும், செஷல்ஸ் நாட்டுக்கும் குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் எதுவும் இல்லை. அதனால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.