செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வெளிநாட்டு வீரர்கள் சென்னையில் குவிந்தனர்


செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வெளிநாட்டு வீரர்கள் சென்னையில் குவிந்தனர்
x

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வெளிநாட்டு வீரர்கள் சென்னையில் குவிந்தனர். பிரமாண்டமான தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை நடக்கிறது.

சென்னை,

'செஸ் விளையாட்டின் ஒலிம்பிக்' என்று அழைக்கப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடைசி இரு போட்டிகள் 'ஆன்-லைன்' மூலம் நடத்தப்பட்டன.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் அங்கிருந்து இந்த போட்டியை வேறு நாட்டுக்கு மாற்ற சர்வதேச செஸ் கூட்டமைப்பு முடிவு செய்தது.

அதைத்தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட்டை நடத்த சில நாடுகள் முயற்சித்த நிலையில் அந்த அரிய வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது. அதுவும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியால் இந்தியாவில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இந்த போட்டியை நடத்துவதற்கு சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஒப்புதல் வழங்கியது. போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க தமிழக அரசு ரூ.92 கோடியை ஒதுக்கியது. அத்துடன் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் இந்த போட்டியை நடத்துவது என்பதில் தமிழக அரசு தீவிரமாக இருக்கிறது. இதனால் இந்த போட்டிக்கான ஆயத்த பணிகள் முழு வீச்சில் நடந்து முடிந்துள்ளன.

நாளை தொடக்கம்

இந்த நிலையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டிக்கான இரண்டு மிகப்பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு சகல வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது. தற்போது மாமல்லபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இன்னொரு பக்கம் விதவிதமான யுக்திகளுடன் போட்டியை தமிழக அரசு பிரபலப்படுத்தியுள்ளது. பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் முக்கியமான இடங்களில் போட்டி சின்னம் (தம்பி) வைக்கப்பட்டிருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் தீபம் தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் திருவிழாவில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் 30 பேரும் அடங்குவர்.

வெளிநாட்டு வீரர்கள்

செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு வீரர்கள் கடந்த 23-ந்தேதி முதல் சென்னை வர தொடங்கினர். முதல் அணியாக மடகாஸ்கர் வீரர்கள் சென்னை வந்தனர். அதைத்தொடர்ந்து பல்வேறு நாட்டு வீரர்கள் தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு குவிந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஒரே நாளில் ஓமன், அங்கோலா, ஜிம்பாப்வே, சுவீடன், பாகிஸ்தான், டென்மார்க், ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா, உக்ரைன், அரூபா, பிரான்ஸ், இத்தாலி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, ஜெர்மனி தென்கொரியா, கேமரூன், மலேசியா, பியூர்டோ ரிகோ, பொலிவியா, டிரினிடாட் அன்ட் டொபாக்கோ, மியான்மர், மாலி, பிரேசில், கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட வீரர்கள் வருகை தந்தனர்.

அவர்களுக்கு தமிழக அரசு அதிகாரிகள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். தன்னார்வலர்கள் மூலம் தங்கும் ஓட்டலுக்கு சொகுசு பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர். இன்றைய தினம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரமாண்ட தொடக்க விழா

செஸ் ஒலிம்பியாட்டின் பிரமாண்டமான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதில் தமிழகத்தின் செழுமையான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். முதல் நாளில் போட்டிகள் எதுவும் கிடையாது. 29-ந்தேதியில் இருந்து போட்டிகள் நடைபெறும்.


Next Story