கிராமங்கள் தோறும் வன பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்படுமா?; பொதுமக்கள் எதிர்பார்ப்பு
காடுகளின் வளங்களை காக்கவும், வேட்டையை தடுக்கவும் கிராமங்கள் தோறும் வன பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காடுகளின் வளங்களை காக்கவும், வேட்டையை தடுக்கவும் கிராமங்கள் தோறும் வன பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
33 சதவீதம் வனம்
தேனி மாவட்டம் சுமார் 33 சதவீதம் வனப்பகுதி நிறைந்த மாவட்டமாக திகழ்கிறது. இங்கு மலைப்பகுதி மற்றும் மலையடிவார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 5 லட்சம் மக்கள் மலை மற்றும் மலையடிவார பகுதிகளை சார்ந்து வாழ்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் வன வளம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது பெரும் அளவு குறைந்துள்ளது. மரங்கள் வெட்டி கடத்தல், சிற்றாறுகளில் தண்ணீர் திருட்டு, வன விலங்குகள் வேட்டையாடுதல் போன்வற்றால் வன வளம் குறைந்துள்ளது. இதனால, பல்லுயிர்ப் பெருக்கத்துக்கான வாய்ப்புகளை மெல்லமெல்ல தேனி மாவட்ட வனப்பகுதிகள் இழந்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
காலத்தின் கட்டாயம்
இதே நிலை நீடித்தால் அடுத்த 10 ஆண்டுகளில் தேனி மாவட்டம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மாறவும் வாய்ப்பு உள்ளதாக இயற்கை வள ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம், தேனி மாவட்டத்தில் மழைப்பொழிவு சீரற்ற நிலையில் இருப்பதோடு, பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. மாவட்டத்தில் நிலத்தடி நீர் சுமார் 82 சதவீதத்துக்கு மேல் பயன்படுத்தப்பட்டு விட்டதாக மத்திய நிலத்தடி நீர்வள ஆணையம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட புள்ளி விவரம் வெளியிட்டு அதிர்ச்சி அளித்தது.
எனவே, மாவட்டத்தில் இருக்கும் வன வளத்தை பாதுகாக்க வேண்டியதும், வன வளத்தை பெருக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகி உள்ளது. வனப் பகுதிகளில் மரங்கள் கடத்தல், வன விலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க தொடர் கண்காணிப்பு அவசியம் என்பதோடு, பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம்.
வன பாதுகாப்பு குழுக்கள்
மாவட்டத்தில் வன வளத்தை பாதுகாக்கவும், வனக் குற்றங்களை தடுக்கவும் மலைப் பகுதிகள் மற்றும் மலையடிவார பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, கிராமங்கள் தோறும் வனப் பாதுகாப்பு குழுக்கள் அமைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற தன்னார்வ வனப் பாதுகாப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கியது. ஆனால், தற்போது வரை அதற்கான முழு முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
வனப்பகுதிக்கு வேட்டைக்கோ, மரங்கள் கடத்தவோ யாரேனும் சென்றால் அதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும், வனத்துறையோடு இணைந்து வனப்பகுதிகளில் ரோந்து பணிகள் மேற்கொள்ளவும், வன வளத்தை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இதுபோன்ற வனப் பாதுகாப்பு குழுக்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் வனப் பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டால் அதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பதோடு, வனத்துறையோடு இணைந்து தீயை அணைக்கும் பணியிலும் ஈடுபடுத்தலாம். அதற்கு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
மீட்பு பணி அனுபவம்
மலையடிவார கிராமங்களில் வன பாதுகாப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வன ஆர்வர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக தேனி மாவட்டத்தை சேர்ந்த பலதரப்பு மக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
மருது (மலையடிவார விவசாயி, பொட்டிப்புரம்):- எங்கள் ஊர் மலையடிவாரத்தில் உள்ள கிராமம். எங்கள் கிராமத்தில் இளைஞர்கள் பலர் உள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் தன்னார்வ இளைஞர்கள் பலர் உள்ளனர். அவர்களையும், வன ஆர்வலர்களையும் ஒருங்கிணைத்து வனப்பாதுகாப்பு குழுக்கள் அமைக்கலாம். மாவட்ட நிர்வாகமும், வனத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து, விவசாயிகள், தன்னார்வலர்கள், வன ஆர்வலர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோரை கொண்ட வன பாதுகாப்பு குழுக்கள் அமைத்து, வன வளம் பாதுகாத்தல், வன வளம் பெருக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். ராசிங்காபுரம் மலைப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பயங்கர தீ விபத்து ஏற்பட்டு சிலர் உடல் கருகி இறந்தனர். அந்த தகவல் அறிந்ததும், நானும் எங்கள் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும் ஓடிச் சென்று மீட்பு பணிக்கு உதவினோம். தன்னார்வ குழுக்கள் அமைப்பதோடு, வனத்துறை பணிகளில் மலைப்பகுதி மற்றும் மலையடிவார பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இயேசுராஜா (ஆசிரியர், உத்தமபாளையம்):- வனம் பாதுகாக்கப்பட்டால் தான் வன விலங்குகள் பாதுகாப்பாக வாழ முடியும். வன விலங்குகளின் பெருக்கம் தான் காடுகளை வளமாக வைத்திருக்கும். காடுகள் வளமாக இருந்தால் தான் அனைத்து உயிர்களுக்குமான மழைப்பொழிவு சீராக கிடைக்கும். எனவே, வனம் குறித்தும், வன விலங்குகளின் பாதுகாப்பு குறித்தும் தொடர்ச்சியான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வனத்துறையினர் பெயரளவுக்கு எப்போதாவது விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். எனவே, தன்னார்வ வனப்பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கி அவர்களுக்கு பயிற்சிகள் அளித்து தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கும், வன பாதுகாப்பு பணிகளுக்கும் அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் வனப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும்.
வேலைவாய்ப்பில் முன்னுரிமை
மெர்லின் ஜான்சி (கல்லூரி மாணவி, டி.கள்ளிப்பட்டி):- புலிகள் காப்பகம் என்ற பெயரில் வனப்பகுதியில் இருந்து மக்களை வெளியேற்ற வனத்துறையினர் ஆர்வம் காட்டுவதாக பார்க்க முடிகிறது. வனப்பாதுகாப்பு என்றால் வன விலங்குகளின் பாதுகாப்பு போன்று, வனப்பகுதிகளில் வாழும் பழங்குடிகளின் பாதுகாப்பும் சேர்ந்தது தான். எனவே மலைகளில் வாழும் மக்களின் நலனையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து தன்னார்வ வன பாதுகாப்பு குழுக்கள் அமைக்க வேண்டும். அந்த குழுவில் உள்ள தன்னார்வலர்களுக்கு வனத்துறை வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அவ்வாறு முன்னுரிமை அளிக்கப்பட்டால் தன்னார்வ குழுக்களில் அதிக இளைஞர்கள் ஆர்வத்துடன் இணைவார்கள்.
பரமேஸ்வரன் (விவசாயி, குள்ளப்பகவுண்டன்பட்டி):- நான் விவசாயம் செய்து வருகிறேன். சில ஆண்டு காலம் சுருளி அருவியில் வனத்துறையில் தற்காலிக பணியாளராக பணியாற்றினேன். வனப்பகுதி குறித்தும், வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களின் பாதுகாப்பு, வன விலங்குகளின் பாதுகாப்பு குறித்தும் மக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. சுற்றுலா இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை வீசுவது, வன விலங்குகளுக்கு தொல்லை கொடுப்பது போன்றவற்றை தடுக்க வேண்டும். அதற்கு போதிய அளவில் வனத்துறையில் ஆட்கள் இல்லை. எனவே, தன்னார்வ இளைஞர்கள், தற்காலிக பணியாளர்களை வனத்துறையில் ஈடுபடுத்தலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.