வனத்துறையினர் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம்


வனத்துறையினர் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
x
தினத்தந்தி 12 Sept 2022 12:30 AM IST (Updated: 12 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை பகுதியில் வனத்துறையினர் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் சென்றனர். அப்போது, வன காட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டுகோள் விடுத்து துண்டு பிரசுரம் வழங்கினர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:-

தேன்கனிக்கோட்டை பகுதியில் வனத்துறையினர் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் சென்றனர். அப்போது, வன காட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டுகோள் விடுத்து துண்டு பிரசுரம் வழங்கினர்.

நாட்டு துப்பாக்கிகள்

இதுதொடர்பாக வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேன்கனிக்கோட்டை ஜவளகிரி வனச்சரக பகுதியில் நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்தால் வருகிற 19-ந் தேதிக்குள் (திங்கட்கிழமை) வனத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும். தாமாக முன்வந்து ஒப்படைக்கும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. 19-ந் தேதிக்கு பிறகு மோப்ப நாய்கள் மூலம் சோதனை செய்து துப்பாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் மின்வேலி அமைக்கப்பட்டு வன உயிரினங்கள் உயிரிழந்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். வனவிலங்குகளை வேட்டையாடினால் வன உயிரின சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காப்புக்காடுகளை ஒட்டியுள்ள பகுதியில் சுற்றுச்சுவர் இல்லாத கிணறுகளில் வனவிலங்குகள் விழுந்து உயிரிழப்பதை தடுக்க சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.

சட்டப்படி நடவடிக்கை

காட்டிற்குள் வெள்ளாடுகளை தடையை மீறி மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றால் வன உயிரின சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைய கூடாது. வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து நீர்வீழ்ச்சி அல்லது நீர்நிலைகளில குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

வனப்பகுதிக்குள் மது அருந்தினாலோ, புகை பிடித்தாலோ, எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து சென்றாலோ, பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து சென்றாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்ஊர்வலம்

இதற்கிடையே கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் ஜவளகிரி, படிகநாளம், சூளகுண்டா, முதுகேரிதொட்டி ஆகிய கிராமங்களில் வனத்துறையினர் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அப்போது மேளதாளம் முழங்க இருசக்கர வாகனங்களில் ஏராளமான வனத்துறையினர், இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். மேலும் அந்த பகுதியில் சுவரொட்டியும் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


Next Story