வனத்துறை ஊழியர் வீட்டில் புகுந்து ரூ11 லட்சம் நகை பணம் கொள்ளை


வனத்துறை ஊழியர் வீட்டில் புகுந்து ரூ11 லட்சம் நகை பணம் கொள்ளை
x

தியாகதுருகம் அருகே வனத்துறை ஊழியர் வீ்ட்டில் புகுந்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

வனத்துறை ஊழியர்

தியாகதுருகம் அருகே வாழவந்தான்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சீத்தாராமன்(வயது 46). இவர் வனத்துறையில் ரிஷிவந்தியம் பகுதி வனவராக பணிபுரிந்து வருகிறார். அமிர்தவள்ளி என்ற மனைவியும், பிரியா, தீபா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

சீத்தாராமன் கடந்த சில மாதங்களாக வாழவந்தான்குப்பம் அருகே உள்ள செம்பியன்மாதேவி கிராமத்தில் உள்ள அவரது மாமனார் நாகேந்திரன்(75) வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஆனால் தினமும் வாழவந்தான்குப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கும் சீத்தாராமன் வந்து செல்வார். வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை வீட்டை பார்த்துவிட்டு இரவு மாமனார் வீட்டில் தங்கினார்.

நகை-பணம் கொள்ளை

இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்து உறவினர்கள் செல்போன் மூலமாக சீத்தாராமனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் பதறிப்போன அவர் செம்பியன்மாதேவியில் இருந்து புறப்பட்டு வந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 6 பவுன் சங்கிலி, 3 பவுன் நெக்லஸ், 4 பவுன் வளையல் உள்பட 13 பவுன் நகை மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை காணாமல் சீத்தாராமன் அதிர்ச்சி அடைந்தார். இரவு நேரத்தில் வீ்ட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மேற்கண்ட நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.11 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

9 பவுன் நகைகள் மீட்பு

இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து பீரோவில் இருந்த துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து பார்த்ததில் அதன் இடையே செயின், வளையல், மோதிரம் உள்ளிட்ட 9 பவுன் நகை மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவை இருந்ததை பார்த்து அவற்றை எடுத்து சீத்தாராமனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

மோப்பநாய்

மேலும் கை ரேகை நிபுணர் ராஜவேல் பீரோவில் இருந்த ரேகைகளை பதிவுசெய்து தடயங்களையும் சேகரித்தார். மோப்பநாய் சாய்னா வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து புறப்பட்டு காளி கோவிலை வலம் வந்தபடி சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூரை வீட்டை சுற்றி வந்து நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதுகுறித்து சீத்தாராமன் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் இரவு நேரங்களில் செல்போன்களில் பேசிய தொலைபேசி எண்களின் தகவல் குறித்தும், கைரேகை நிபுணர்கள் பதிவு செய்த ரேகை குறித்து ஆய்வு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பரபரப்பு

வனத்துறை ஊழியர் வீ்ட்டில் புகுந்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளைஅடித்துச் சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story