புலியை பிடிக்க டிரோன் கேமரா மூலம் வனத்துறை கண்காணிப்பு
பேச்சிப்பாறை அருகே புலியை பிடிக்க டிரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்தனர்.
குலசேகரம்:
பேச்சிப்பாறை அருகே புலியை பிடிக்க டிரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்தனர்.
புலி அட்டகாசம்
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே சிற்றாறு அரசு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு, மூக்கறைக்கல், மல்லமுத்தன்கரை, புரையிடம் உள்ளிட்ட பழங்குடியினர் குடியிருப்புகளில் புகுந்து புலி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த 3-ந் தேதி முதல் அச்சுறுத்தி வரும் புலி ஆடுகள், மாடு, நாயை அடித்துக் கொன்றுள்ளது. முதலில் புலியின் நடமாட்டத்தை கண்டறிய வனத்துறையினர் அந்த பகுதியில் 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை வைத்தனர். மேலும் 2 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது.
டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு
இதுதவிர ரப்பர் கழக அலுவலர் குடியிருப்பில் இரவு நேரத்தில் ஆட்டைக் கட்டி வைத்து விட்டு மயக்க ஊசியுடன் காத்திருந்தனர். ஆனால் இந்த முயற்சிகளுக்கெல்லாம் இதுவரை பலன் கிடைக்காத நிலையே இருந்து வருகிறது. புலியை பிடிப்பதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற எலைட் படையினர் வந்து முகாமிட்டுள்ளனர். மேலும் வனத்துறையின் இதர சரகங்களில் இருந்தும் வன அலுவலர்கள், ஊழியர்கள் இந்த பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலை முதல் மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையில் நவீன கேமரா பொருத்தப்பட்ட டிரோன் கருவியுடன் வனத்துறையினர் புலியின் நடமாட்டம் இருக்கிறதா? என கண்காணித்தனர். மாலை வரை தேடுதல் வேட்டை நடத்திய பின்னரும் புலியின் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இரவு, பகலாக...
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "வன விலங்குகளிடமிருந்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கடமை வனத்துறையினருக்கு இருக்கும் நிலையில் புலியைப் பிடிக்க வனத்துறை அனைத்து விதமான முயற்சிகளையும் இரவு, பகலாக செய்து வருகிறோம். கடந்த 5 நாட்களாக புலியின் நடமாட்டம் இல்லாமல் உள்ளது. எனினும் அதனை பிடிக்கும் பணியைத் தொய்வின்றி செய்து வருகிறோம். தற்போது டிரோன் கேமரா மூலம் சிற்றாறு, மல்லன்முத்தன்கரை, புரையிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம். விரைவில் புலியை பிடித்து விடுவோம்" என்றனர்.