மன்னவனூரில் வனச்சரகர் பணியிடை நீக்கம்


மன்னவனூரில் வனச்சரகர் பணியிடை நீக்கம்
x

மன்னவனூரில் வனச்சரகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூரில் சூழல் சுற்றுலா மையம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மன்னவனூர் ஏரியில் பரிசல் சவாரி, ஜிப்-லைன் சாகசம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தில் பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். மேலும் சூழல் சுற்றுலா மையத்தில் வனச்சரகராக நாதன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

மன்னவனூர் ஏரியில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவதற்காக வரும் மலைக்கிராம விவசாயிகளை வனச்சரகர் நாதன் அவதூறாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் சூழல் சுற்றுலா மையத்தில் பணியாற்றும் பெண்களையும், மற்ற பணியாளர்களையும் அவர் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் மற்றும் சூழல் சுற்றுலா மைய பணியாளர்கள் சார்பில் மாவட்ட வன அலுவலர், மண்டல வன அலுவலர், கொடைக்கானல் ஆர்.டி.ஓ. ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வனச்சரகர் நாதனையும், சூழல் சுற்றுலா மையத்தில் பணியாற்றும் பணியாளர்களையும் உதவி வன பாதுகாவலர் சக்திவேல் நேரடியாக அழைத்து விசாரணை நடத்தினார். பின்னர் விசாரணை அறிக்கையை மண்டல வன பாதுகாவலரிடம், உதவி வன பாதுகாவலர் சமர்ப்பித்தார். அதைத்தொடர்ந்து வனச்சரகர் நாதனை பணியிடை நீக்கம் செய்து, மண்டல வன பாதுகாவலர் உத்தரவிட்டார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வனச்சரகர் நாதன், இன்னும் 3 மாதத்தில் பணி ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story