காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்த வயலில் வன அதிகாரிகள் ஆய்வு


காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்த வயலில் வன அதிகாரிகள் ஆய்வு
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்த வயலில் வன அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர்

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்த வயலில் வன அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள உள்ளிக்கடை, பெருமாள் கோவில், கணபதி அக்ரகாரம், புத்தூர், பட்டுக்குடி, மணலூர், தேவன்குடி, வீரமாங்குடி உள்ளிட்ட காவிரி, கொள்ளிட கரையோர கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த நெற்பயிர்கள் தற்போது வளர்ச்சி பருவத்திலும், அறுவடைக்கு தயாரான நிலையிலும் உள்ளன. இதற்கிடையே இந்த நெல் வயல்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து அறுவடைக்கு தயாரான நெல் பயிர்களை மிதித்தும், அதன் மீது புரண்டும் சேதம் ஏற்படுத்துகிறது. காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தால் விவசாயிகள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர். எனவே இந்த காட்டுப்பன்றிகளை வனத் துறையினர் பிடித்து செல்ல வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

'தினத்தந்தி' செய்தி எதிரொலி

இதுகுறித்து செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று வெளியானது. இதையடுத்து தஞ்சை மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின் பேரில், தஞ்சை வனச்சரக அலுவலர் ரஞ்சித் ஆலோசனையின் பேரில், பாபநாசம் பிரிவு வனவர் ரவி, பாபநாசம் வனக்காப்பாளர் சண்முகவேல் ஆகியோர் அய்யம்பேட்டை அருகே பட்டுக்குடி கிராமத்தில் காட்டுப்பன்றிகளால் சேதம் அடைந்த நெல் வயலை பார்வையிட்டனர்.

தொடர்ந்து வன அதிகாரிகள் கூறுகையில், 'விரைவில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை பெற்று வலைகளை பயன்படுத்தி காட்டுப் பன்றிகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விடப்படும்' என்றனர். இதையடுத்து அதிகாரிகளுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


Next Story