காட்டு யானைகளை விரட்ட கும்கிகளுடன் வனத்துறை ரோந்து பணி


காட்டு யானைகளை விரட்ட கும்கிகளுடன் வனத்துறை ரோந்து பணி
x

ஓவேலி பகுதியில் காட்டு யானைகளை விரட்ட கும்கிகளுடன் வனத் துறை யினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்,

ஓவேலி பகுதியில் காட்டு யானைகளை விரட்ட கும்கிகளுடன் வனத் துறை யினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரோந்து பணி தீவிரம்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை, பாரம் ஆகிய இடங்களில் ஆனந்தகுமார், மும்தாஜ் ஆகிய 2 பேரை காட்டு யானைகள் தாக்கியது.

இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். இதைத்தொடர்ந்து காட்டு யானைகளை விரட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து முதுமலையில் இருந்து சீனிவாசன், விஜய், சங்கர், கிருஷ்ணா ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, வனத்துறையினர் ஓவேலி பகுதியில் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் நேற்று காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பாரம், ஆரோட்டுப்பாறை ஆகிய இடங்களில் ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து ஓவேலி உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசன் கூறியதாவது:-

அலாரம் கருவிகள்

ஓவேலியில் மனித-வனவிலங்கு மோதல் அதிகம் உள்ள பகுதிகளில் 4 கும்கி யானைகள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் யானைகள் கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் ரோந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

மக்கள் வசிக்கும் பகுதிகளில் யானைகளின் நடமாட்டத்தை உன்னிப்பாக கண்காணித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகிறது. அதிகாலை மற்றும் இரவு 7 மணிக்கு மேல் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம்.

யானைகளின் நடமாட்டம் குறித்த தகவல்களை தொடர்ந்து பரிமாறிக் கொள்ளவும், தவறான தகவல் தொடர்புகளை தவிர்க்கவும் தனி வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டு உள்ளது. யானை நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் முன் எச்சரிக்கை அலாரம் கருவிகள் புதியதாக பொருத்தப்பட்டு உள்ளது.

இதேபோல் காலை நேரத்தில் பஸ் வசதி இல்லாத மற்றும் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு பாதுகாப்பாக வனத்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story