பெருந்துறையில் ரூ.29 லட்சம் பறித்த வழக்கில் திருப்பம்: கள்ள நோட்டுகளை மாற்ற வந்தபோது சிக்கிய கும்பல்- போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்


பெருந்துறையில் ரூ.29 லட்சம் பறித்த வழக்கில் திருப்பம்: கள்ள நோட்டுகளை மாற்ற வந்தபோது சிக்கிய கும்பல்- போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
x

பெருந்துறையில் ரூ.29 லட்சம் பறித்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. கள்ள நோட்டுகளை மாற்ற வந்த கும்பல் என போலீஸ் விசாரரைணயில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறையில் ரூ.29 லட்சம் பறித்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. கள்ள நோட்டுகளை மாற்ற வந்த கும்பல் என போலீஸ் விசாரரைணயில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

5 பேர் கைது

கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த அன்சார் என்பவர் தனது நண்பர்களுடன் ஜவுளி வாங்குவதற்காக ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட், ஏரி கருப்பன் கோவில் அருகே காரில் நின்று கொண்டு இருந்தார். அப்போது போலீஸ் சீருடையில் மற்றொரு காரில் வந்த 4 பேர் அன்சாரியிடம், நீங்கள் வைத்திருப்பது கருப்பு பணம் என்று கூறி, ரூ.29 லட்சத்தை பறித்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து அன்சார் கொடுத்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி, நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த பிரேமா என்கிற மகாலட்சுமி (வயது 48), கோவை மாவட்டம் ராமநாதபுரம் பாரதி நகரை சேர்ந்த ஜனார்த்தனம் (47), கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள புரையார் தேசத்தை சேர்ந்த பஷீர் (49), பாலக்காடு மாவட்டம் மேலர்கோடு சிட்டலிம்சேரியை சேர்ந்த ஜலில் (40), பாலக்காடு அருகே உள்ள கண்ணடி பகுதியை சேர்ந்த சுதிர் (47) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

கள்ள நோட்டு

அவர்களிடம், பெருந்துறை உதவி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் மற்றும் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கைதான 5 பேரும் போலீசாரிடம் கூறியதாவது:-

எங்கள் மீது குற்றம் சாட்டிய அன்சார் மற்றும் அவரது நண்பர்கள் அபிலாஷ், பஷீர் ஆகியோருடன் எங்களுக்கு ஏற்கனவே தொடர்பு உள்ளது. நாங்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து இரிடியம், தங்க பிஸ்கட் ஆகியவற்றை கடத்துவதையும், பணம் இரட்டிப்பு செய்வது போன்ற குற்றச்செயல்களில் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வருகிறோம். அன்சாரிடம் ரூ.29 லட்சத்தை பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக, எங்களிடம் உள்ள ரூ.6 கோடி கள்ள நோட்டுகளை அவர்களுக்கு வழங்குவதாக ஒப்பந்தம் போட்டு இருந்தோம்.

பொய் புகார்

ஆனால் ஒப்பந்தப்படி நாங்கள் ரூ.6 கோடிக்கு கள்ள நோட்டை தர முடியாமல் போனது. இதனால் அவர்கள் வைத்திருந்த ரூ.29 லட்சத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து காரில் தப்பித்து விட்டோம். இதைத்தொடர்ந்து அன்சார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் எங்களை கைது செய்து விட்டனர். எங்களிடம் விசாரணை நடத்தினால் அவர்கள் மாட்டிக்கொள்வார்கள் என்பதால், பணத்தை கூட பெற்றுக்கொள்ளாமல் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் இருந்து தலைமறைவாகி விட்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் 2 பேருக்கு வலைவீச்சு

இதற்கிடையில் பொய்யான புகாரை கொடுத்து, போலீசாரின் கவனத்தை திசை திருப்ப முயற்சித்த, அன்சார் மற்றும் அவருடைய நண்பர்கள் அபிலாஷ், பஷீர் ஆகியோர் மீது பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் பஷீர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள அன்சார் மற்றும் அபிலேஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story