90 கிராமங்களில் யாதவ மகாசபை கிளை அமைப்புகள் உருவாக்கம்
90 கிராமங்களில் யாதவ மகாசபை கிளை அமைப்புகள் உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு யாதவ மகாசபையின் பெரம்பலூர் மாவட்ட தலைவராக ஸ்ரீஅம்மன் பேங்கர்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் ந.முத்தையா நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட செயலாளராக அன்னமங்கலம் செல்வராஜ், பொருளாளராக ஈச்சம்பட்டி முத்துசாமி, மாவட்ட துணைத் தலைவராக பத்திரம் சிவக்குமார், துணை செயலாளராக ராமசாமி, துணை பொருளாளராக ரகுவரன் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட தலைவர் ந.முத்தையா தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள யாதவ மகாசபை அலுவலத்தில் மாநில தலைவர் நாசே.ராமச்சந்திரன், மாநில செயலாளர் செல்வராஜ், பொருளாளர் எத்திராஜ், மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் பொட்டல்துரை ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்ச்சியின்போது சீவலப்பேரியில் சாதிய வன்முறைக்கு பலியான யாதவ மகாசபையை சேர்ந்த் சிதம்பரம், மாயாண்டி ஆகியோர் குடும்பத்திற்கு பெரம்பலூர் மாவட்ட அமைப்பின் சார்பில் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. அதன்பின்னர் முத்தையா நிருபர்களிடம் கூறியதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகரம், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் மற்றும் பெரம்பலூர் ஒன்றியத்திற்கு தலா 6 பேர் வீதம் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்த முதல் 3 மதிப்பெண்களை பெற்ற யாதவகுல மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே ரொக்கப்பரிசுகள் முறையே ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம் வீதம் ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ள யாதவ மகாசபை விழாவில் வழங்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் நகர, வட்டார அமைப்புகள் தவிர 90 கிராமங்களில் யாதவ மகாசபை கிளை அமைப்புகள் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளன. யாதவ மகாசபையின் நகர மற்றும் அனைத்து கிராம அமைப்புகளிலும் உறுப்பினர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.