முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஈஸ்வரன் கடத்தல் வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கோர்ட்டில் சரண்
முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஈஸ்வரன் கடத்தல் வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
புஞ்சைபுளியம்பட்டி
முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஈஸ்வரன் கடத்தல் வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
6 பேர் கைது
பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் எஸ்.ஈஸ்வரன். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி பனையம்பள்ளி - பவானிசாகர் ரோடு, மல்லியம்பட்டி வனப்பகுதி அருகே சென்றபோது காரில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர் ஒரு நாள் முழுவதும் அவரை சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்து, அவரிடம் இருந்து ரூ.1½ கோடியை அபகரித்துக்கொண்டு விடுவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பெயரில் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான தனிப்படையினர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஈஸ்வரனை கடத்தி பணம் பறித்தவர்களை தீவிரமாக தேடி வந்தார்கள். இதில் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாக மோகன், கர்ணன், பிரைட் பால், கண்ணன், சீனிவாசன், தர்மலிங்கம் உள்ளிட்ட 6 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய குற்றவாளி தலைமறைவு
முக்கிய குற்றவாளியான சத்தியமங்கலம் அரியப்பம்பாளையத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான மிலிட்டரி சரவணன் (வயது 47) என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் அவர் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் தன்னை எப்படியும் கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் கடந்த அக்டோபர் மாதம் 4-ந் தேதி தனது வீடு அருகே விஷம் குடித்தார். பின்னர் உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றினார்கள்.
அதன்பின்னர் அவர் மீண்டும் தலைமறைவானார். மேலும் அவர் முன்னாள் எம்.எல்.ஏ. கடத்தல் வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு, இது முக்கிய வழக்கு. எனவே முன்ஜாமீன் அளிக்க முடியாது எனக்கூறி சரவணனின் முன் ஜாமீன் மனுவை ஈரோடு மாவட்ட கோர்ட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
கோர்ட்டில் சரண்
அதைத்தொடர்ந்து சரவணன் கடந்த 17-ந் தேதி ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனக்கு முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தள்ளுபடி செய்து சரவணனை கோர்ட்டில் சரணடைய உத்தரவிட்டார்.
அதன்பேரில் சரவணன் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவரை நீதிபதி, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.