முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அலுவலகம் இடித்து தரைமட்டம்
திருவண்ணாமலையில் முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அலுவலகம் இடிக்கப்பட்டது. இதனால் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் மற்றும் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அலுவலகம் இடிக்கப்பட்டது. இதனால் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் மற்றும் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
'அம்மா இல்லம்'
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் பெருமாள் நகர் ராஜன். தற்போது திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்து வருகிறார். அவர், போளூரை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான திருவண்ணாமலை-போளூர் சாலையில் உள்ள காலி இடத்தை ஒப்பந்த அடிப்படையில் பெற்று அலுவலகம் அமைத்து இருந்தார்.
மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் அவர் அந்த அலுவலகத்தை 'அம்மா இல்லம்' என்ற பெயரில் நடத்தி வந்தார். இதனையடுத்து அங்கு இளைஞர்களுக்கான கணினி பயிற்சி கூடம், தையல் பயிற்சி கூடம், அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உணவு அருந்தும் வகையில் உணவு கூடம் போன்றவற்றை அமைத்து நடத்தி வந்தார்.
புகார் மனு
இந்த நிலையில் ஒப்பந்த நாட்கள் முடிவடைந்தும் அவர் அந்த இடத்தில் அம்மா இல்லத்தை தொடர்ந்து நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் 'அம்மா இல்லம்' இருந்த இடத்தை போளூரை சேர்ந்த நபரிடம் இருந்து திருவண்ணாமலை டவுனை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும், வக்கீலுமான சஞ்சீவிராமன் என்பவர் விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த இடத்தை காலி செய்து தருமாறு வக்கீல் சஞ்சீவிராமன், ராஜனிடம் பலமுறை கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து வக்கீல் சஞ்சீவிராமன் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏற்கனவே புகார் மனு அளித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இடித்து தரைமட்டம்
இந்த நிலையில் ராஜன் வெளிநாடு சென்றுள்ள நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேற்று முன்தினம் நள்ளிரவு வக்கீல் சஞ்சீவிராமன் தரப்பினர் 2 பொக்லைன் எந்திரத்தை கொண்டு வந்து அம்மா இல்லத்தை இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ராஜனின் ஆதரவாளர்கள் நேற்று காலையில் அங்கு ஒன்று திரண்டு பொக்லைன் எந்திரங்களை சிறைப்பிடித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்தவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். மேலும் பெருமாள் நகர் ராஜனின் ஆதரவாளர்கள் போளூர் சாலையில் அலுவலகம் இடிக்கப்பட்டத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தீக்குளிக்க முயற்சி
மேலும் 2 பேர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் இதுகுறித்து திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும் 'அம்மா இல்லம்' மட்டுமின்றி அதில் இருந்த டி.வி., கம்ப்யூட்டர்கள், தையல் எந்திரங்கள், மின்விசிறி, வேட்டி, சேலை போன்ற பொருட்கள் சேதப்படுத்தி சூறையாடப்பட்டு உள்ளதாக பெருமாள் நகர் ராஜன் தரப்பினர் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தனர்.
இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.