பாலக்கோட்டில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் விவசாயி பலி; கணவன்-மனைவி படுகாயம்
பாலக்கோடு:
பாலக்கோட்டில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் விவசாயி பலியானார். மேலும் கணவன்-மனைவி படுகாயம் அடைந்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
தர்மபுரி மாவட்டம் பெல்ரம்பட்டி அருகே உள்ள கன்சால்பைல் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் (வயது 45). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை குமரவேல் பாலக்கோடுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
எதிரே முனுசாமிகொட்டாயை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவம் (20), தனது மனைவி சத்யா (19) உடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். காட்டு மாரியம்மன் கோவில் அருகே இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
போலீசார் விசாரணை
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயம் அடைந்த குமரவேல், சம்பவ இடத்திலேயே பலியானார். சிவம், சத்யா படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார், குமரவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.