துப்பாக்கி வைத்திருந்த விவசாயியிடம் விசாரணை
வடமதுரை அருகே துப்பாக்கி வைத்திருந்த விவசாயியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அய்யலூர் அருகே உள்ள தீத்தாகிழவனூரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 35). விவசாயி. இவர், தனது தோட்டத்தில் அனுமதியின்றி துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக அப்பகுதி பொதுமக்கள், வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பழனிசாமி தனது தோட்டத்தில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் பழனிசாமியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே பழனிசாமி வைத்திருந்த துப்பாக்கி எந்த வகையை சேர்ந்தது என்று அறிய, அதனை சீலப்பாடி ஆயுதப்படை போலீஸ் பிரிவுக்கு அனுப்பி வைத்தனர். அதில் அந்த துப்பாக்கி ஏர்கன் வகையை சேர்ந்தது என்பது தெரியவந்தது. இதையடுத்து பழனிசாமியிடம் ஏர்கன் துப்பாக்கியை பொது இடங்களில் பயன்படுத்த கூடாது என்று போலீசார் எச்சரித்து எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.