தர்மபுரியில் மாலை நேர உழவர் சந்தை தொடக்கம்-கலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு


தர்மபுரியில் மாலை நேர உழவர் சந்தை தொடக்கம்-கலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் மாலை நேர உழவர் சந்தை நேற்று முதல் தொடங்கப்பட்டது. இந்த சந்தையை கலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு செய்தார்.

மாலை நேர உழவர் சந்தை

தர்மபுரி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் தர்மபுரி நகரில் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும் இங்கு சுமார் 40 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. 120 விவசாயிகளும், 2 ஆயிரம் பொதுமக்களும் தினமும் இங்கு வருகிறார்கள். பண்டிகை காலங்களில் காய்கறி விற்பனை வழக்கத்தை விட அதிகமாக காணப்படும்.

தற்போது இங்கு மாலை நேர உழவர் சந்தை தொடங்கப்பட்டுள்ளது. தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த மாலை நேர உழவர் சந்தை செயல்படும். வழக்கமாக காலை நேர உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாலை நேர உழவர் சந்தையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உற்பத்தி செய்யும் சிறுதானியங்கள், பயிர் வகைகள், பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான தேன், சத்துமாவு, பிஸ்கட், நொறுக்கு தீனிகள், ஜாம், கெட்ச்அப் மற்றும் ஊறுகாய் வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.

கலெக்டர் ஆய்வு

முதல் கட்டமாக 20 கடைகளில் இந்த வேளாண் பொருட்கள் வெளி மார்க்கெட்டை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை 4 மணிக்கு மாலை நேர உழவர் சந்தை தொடங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வேளாண் பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி சென்றனர்.

இந்தநிலையில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி மாலை நேர உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களை பார்வையிட்டு, கேட்டறிந்தார்.

கூடுதல் கடைகள்

அப்போது கலெக்டர் கூறுகையில், தர்மபுரி உழவர் சந்தையில் தொடங்கப்பட்டுள்ள மாலை நேர உழவர் சந்தையில் பொதுமக்களின் வரவேற்புக்கு ஏற்ப கூடுதல் கடைகள் திறக்க ஏற்பாடு செய்யப்படும். மாலை நேர உழவர் சந்தை குறித்து பொதுமக்கள் பார்வைக்கு நன்றாக தெரியும் வகையில் பெயர் பலகைகளை அலுவலர்கள் வைக்க வேண்டும். உழவர் சந்தைக்கு மாலை நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள் என்பதால் கூடுதல் மின்விளக்குகளை பொருத்த வேண்டும், என்று கூறினார்.

இந்த ஆய்வின்போது வேளாண் வணிக துணை இயக்குனர் கணேசன், வேளாண் அலுவலர் தினேஷ், தாசில்தார் ராஜராஜன், காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் மனோகரன், நகராட்சி கவுன்சிலர் மாதேஸ்வரன், தி.மு.க. மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காவேரி, தர்மபுரி உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன், உதவி நிர்வாக அலுவலர்கள் முனியப்பன், மஞ்சுநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story