மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் காமராஜ்
குடவாசல் எம்.ஜி.ஆர். அரசு கல்லூரியை இடம் மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆதரவு தெரிவித்து அவர் களுடன் போராட்டத் தில் ஈடுபட்டார்.
குடவாசல்;
குடவாசல் எம்.ஜி.ஆர். அரசு கல்லூரியை இடம் மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆதரவு தெரிவித்து அவர் களுடன் போராட்டத் தில் ஈடுபட்டார்.
அரசு கல்லூரி
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரிக்கு கட்டிட வசதி இல்லாததால் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் கல்லூரி வகுப்புகள் நடைபெற்று வந்தன. எனவே கல்லூரிக்கு அரசு நிதி ஒதுக்கி புதிய கட்டிடங்களை கட்ட உத்தரவிட்டிருந்தது. தற்போது அரசு இக்கல்லூரிக்கு கட்டிடம் கட்ட போதிய இட வசதி குடவாசலில் இல்லை என்று கூறி இக்கல்லூரியை திருவாரூர் தொகுதிக்கு உட்பட்ட செல்லூருக்கு மாற்ற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து மாணவர்கள் கடந்த 3 நாட்களாக குடவாசல் பஸ் நிலையத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சர் காமராஜ்
மாணவர்களின் போராட்டத்துக்கு பெற்றோர்களும், பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இந்தநிலையில் நேற்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எம்.எல்.ஏ. போராட்டம் நடத்தி வரும் மாணவ- மாணவர்களை நேரில் சந்தித்து அ.தி.மு.க. சார்பில் தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-கடந்த அ.தி.மு.க.. ஆட்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குடவாசல் பகுதிக்கு என இந்த கல்லூரியை வழங்க உத்தரவிட்டார். கடந்த 8 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த கல்லூரிக்கு கட்டிடம் கட்டுவதற்கு போதிய நிதியை ஒதுக்கி அரசு உத்தரவிட்டது. ஆனால் கட்டிடம் கட்ட போதிய இடம் தேர்வு செய்ய கால தாமதம் ஆனதால் இதை காரணம் காட்டி தற்போதைய தி.மு.க. அரசு கல்லூரியை இடமாற்றம் செய்து திருவாரூர் தொகுதிக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கிறது.
ஆதரவு
இதனை பொதுமக்கள் என்றும் ஏற்கப்போவதில்லை. மாணவர்களும் இதனை எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள் மாணவர்களின் போராட்டத்துக்கு அரசு செவி சாய்க்க வேண்டும். மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதித்து காட்டுவார்கள். இதை அரசு உணர்ந்து கல்லூரியை வேறு இடத்திற்கு மாற்றுவதை தவிர்க்க வேண்டும். மாணவர்களின் போராட்டத்துக்கு அ.தி.மு.க. சார்பில் முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன். தேவைப்பட்டால் அ.தி.மு.க.வினரும் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.போராட்டத்தில் குடவாசல் வர்த்தக நலக் கழக தலைவர் ராஜேந்திரன், அ.தி.மு.க.. ஒன்றிய செயலாளர் பாப்பா சுப்பிரமணியன், ராஜேந்திரன் நகர செயலாளர் சுவாமிநாதன், ஒன்றியக்குழு தலைவர் கிளாராசெந்தில், ஒன்றிய குழு துணைத் தலைவர் தென்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.