அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 3 பேர் மீது வழக்கு
எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பேனர் வைத்த மயிலாடுதுறை அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மயிலாடுதுறை
எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பேனர் வைத்த மயிலாடுதுறை அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் விளம்பர பேனர்கள் வைத்திருந்தனர். மேலும், ஆங்காங்கே கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன.
முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு
ஆனால் விளம்பர பேனர்கள், கட்சி கொடிகள், தோரணங்கள் போலீசார் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உரிய அனுமதி பெறாமல் விளம்பர பேனர் வைத்தது மற்றும் கொடிகள், தோரணங்கள் கட்டியதாக மயிலாடுதுறை முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் செந்தமிழன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் நாஞ்சில் கார்த்திக் ஆகியோர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.