முன்னாள் எம்.எல்.ஏ. வீடு சூறை; கார் தீ வைத்து எரிப்பு


முன்னாள் எம்.எல்.ஏ. வீடு சூறை; கார் தீ வைத்து எரிப்பு
x

மதுரை அருகே முன்னாள் எம்.எல்.ஏ. வீடு சூறையாடப்பட்டது. மேலும் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை,

மதுரை மாவட்டம் எம்.சத்திரப்பட்டி அருகே உள்ள கருவனூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பலம். இவர் கடந்த 2001-2006-ல் சமயநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தார். தற்போது, அவர் கருவனூர் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் கருவனூரில் உள்ள பத்திரகாளியம்மன் பாறைக் கருப்பு அய்யனார் கோவிலில் திருவிழா கடந்த ஒரு வாரம் நடந்தது. இந்த திருவிழாவில் முதல் மரியாதை அளிக்கப்படுவது வழக்கம் என கூறப்படுகிறது.

இதில், முதல் மரியாதையை பெறுவது தொடர்பாக, பொன்னம்பலத்தின் மருமகன் பழனிகுமாருக்கும், தி.மு.க.வை சேர்ந்த வேல்முருகன் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஊர் மக்கள் அவர்களை சமரசம் செய்தனர்.

இருதரப்பு மோதல்

இந்த முன்விரோதம் காரணமாக, நேற்று முன்தினம் இரவு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் வீட்டின் மீது ஒரு கும்பல் கற்களை வீசியும், வாகனங்களை அடித்து நொறுக்கியும் தாக்குதலில் ஈடுபட்டது. மேலும், வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பொன்னம்பலத்தின் காருக்கும் அந்தக் கும்பல் தீ வைத்தது. இதில், கார் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது.

இந்த தாக்குதல்களில், பொன்னம்பலத்தின் மருமகன் பழனிக்குமார் (40) உள்பட 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

வழக்குப்பதிவு

இதுதொடர்பாக, பழனிக்குமார் அளித்த புகாரின்பேரில் தி.மு.க.வைச் சேர்ந்த வேல்முருகன்(38) உள்ளிட்டோர் மீது எம்.சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மோதல் சம்பவம் காரணமாக, கருவனூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Next Story