விவசாயி சாவில் திருப்பம்; அடித்து கொன்ற உறவினர்கள் 9 பேர் கைது


விவசாயி சாவில் திருப்பம்; அடித்து கொன்ற உறவினர்கள் 9 பேர் கைது
x
தினத்தந்தி 17 May 2023 2:30 AM IST (Updated: 17 May 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

சாணார்பட்டி அருகே விவசாயி சாவில் திருப்பமாக, சொத்து பிரச்சினையில் அவரை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. அவருடைய அக்காள், தம்பி உள்பட உறவினர்கள் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே விவசாயி சாவில் திருப்பமாக, சொத்து பிரச்சினையில் அவரை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. அவருடைய அக்காள், தம்பி உள்பட உறவினர்கள் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

விவசாயி அடித்து கொலை

சாணார்பட்டி அருகே உள்ள சக்கிலியன்கொடையை சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). விவசாயி. இவர், கடந்த 14-ந்தேதி அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் மரத்தில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். அவரது உடலில் ரத்தகாயங்கள் இருந்தன. இதையடுத்து சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர் உடலில் இருந்த காயங்கள் வைத்து யாரேனும் அடித்து கொலை செய்துவிட்டு, தூக்கில் தொங்கவிட்டார்களா? என்ற கோணத்தில் சாணார்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கண்ணன் சாவில் திடீர் திருப்பமாக, அவர் சொத்து பிரச்சினையில் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

கொலை பழியில் தப்பிக்க...

இதுதொடர்பாக கண்ணனின் உறவினர்களிடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினா். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கொலையான கண்ணனுக்கும், அவரது அக்காள் அழகி (58) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இதுகுறித்து அழகி, அவரது கணவர் சின்னக்காளை (60), அவர்களது மகன் அழகர்சாமி (38) மற்றும் கண்ணனின் தம்பி முருகன்(48), அவரது மனைவி வெள்ளையம்மாள் (38), மகன்கள் சதீஷ்குமார் (25), குணா (19), கண்ணனின் இன்னொரு அக்காள் நாச்சம்மாள் (60), அவரது மகன் வெள்ளைச்சாமி (35) ஆகியோர் கண்ணன் வீட்டுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்கள் ஆத்திரம் அடைந்து கண்ணனை கல்லால் அடித்து உள்ளனர். அதில் அவர் இறந்துவிட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அழகி மற்றும் உறவினர்கள் கொலையை மறைக்க, அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் இருந்த மரத்தில் கண்ணன் தூக்குப்போட்டு இறந்ததைபோல் உடலை கயிற்றில் கட்டி தொங்கவிட்டு சென்றுள்ளனர்.

இவ்வாறு போலீசார் கூறினா்.

9 பேர் கைது

இதையடுத்து சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் பதிவு செய்தனர். மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய அழகி உள்பட 9 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி நேற்று கைது செய்தார்.

சொத்து பிரச்சினையில் விவசாயியியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட சம்பவத்தில் அக்காள், தம்பி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story