முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை
புதுக்கோட்டை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே இளங்குடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் என்கிற சுந்தரகோபாலன் (வயது 55). இவர் தேக்காட்டூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். இவரது மனைவி முத்து. இவர் தேக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.
சுந்தரகோபாலன் இளங்குடிபட்டி அய்யனார் கோவில் ஆர்ச் அருகில் கூத்தப்பனை மரம் வைத்து சுவாமியாக வழிபட்டு வந்தார். நேற்று ஆடிப்பெருக்கையொட்டி கூத்தப்பனை சுவாமியை வழிபட மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவருடன் பாபு என்பவரும் சென்றுள்ளார். இதையடுத்து கோவில் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாமி கும்பிட சென்றார்.
வெட்டிக்கொலை
இரவு 7.30 மணியளவில் அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுந்தரகோபாலனை சுற்றி வளைத்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திேலயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
இதையடுத்து பாபு ஊருக்குள் சென்று நடந்ததை கூறியுள்ளார். இதைதொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து விரைந்து வந்து அப்பகுதியில் மர்மநபர்களை ேதடி பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
பிரேத பரிசோதனை
பின்னர் இதுகுறித்து நமணசமுத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.
மோப்பநாய் தீரன் வரவழைக்கப்பட்டது. அது நீண்ட தூரம் ஓடிச்சென்று நின்றுகொண்டது. இதற்கிடைேய போலீசார் சுந்தரகோபாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வலைவீச்சு
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுந்தரகோபாலன் தேர்தல் முன்விரோதம் காரணமாக கொலை செய்தனரா? அல்லது பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் கொலை செய்தனரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய மர்மநபர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.