முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டுக்கு தீ வைப்பு; வாலிபர் கைது
முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள பெட்டைக்குளத்தைச் சேர்ந்தவர் அப்துல்காதர் (வயது 60). முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவர், ஊர் ஜமாத் தலைவராகவும் உள்ளார். திசையன்விளை அருகே ரம்மதபுரத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் திலகராஜ். இவர் மைக்செட் மற்றும் பந்தல் அமைக்கும் தொழில் நடத்தி வருகிறார். இவர்களுக்கு இடையே நில பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் இரவில் அப்துல்காதரின் வீட்டு கதவின் முன்பாக மர்மநபர் துணிகளை குவித்து தீ வைத்துள்ளார். இதில் கதவு எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து அப்துல்காதர் திசையன்விளை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், தனது வீட்டுக்கு பிரான்சிஸ் திலகராஜின் மகன் பிராங்கிளின் கிளின்டன் (28) தீ வைத்ததாக தெரிவித்து இருந்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பிராங்கிளின் கிளின்டனை நேற்று கைது செய்தனர். இதற்கிடையே பிராங்கிளின் கிளின்டன் மீது பொய் வழக்குப்பதிவு செய்து கைது செய்ததாக கூறி, நேற்று மாலையில் திசையன்விளை போலீஸ் நிலையம் முன்பாக அவருடைய தந்தை, தாய், தங்கை, உறவினர் ஆகிய 4 பேர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த வழியாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.