பாப்பிரெட்டிப்பட்டி அருகே புதர்களின் ஆக்கிரமிப்பில் வாணியாறு கிளை கால்வாய்-தூர்வார விவசாயிகள் கோரிக்கை


பாப்பிரெட்டிப்பட்டி அருகே புதர்களின் ஆக்கிரமிப்பில் வாணியாறு கிளை கால்வாய்-தூர்வார விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே புதர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள வாணியாறு இடது புற கிளை கால்வாயை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாணியாறு கால்வாய்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாணியாறு அணை உள்ளது. கடந்த சில மாதங்களாக பெய்த கனமழை காரணமாக இந்த அணை நிரம்பியது. இதனால் கடந்த ஒரு மாதமாக வாணியாறு அணையில் இருந்து உபரிநீர் வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இடதுபுற கால்வாய் வழியாக வெளியேற்றப்படும் உபரிநீர் வெங்கடசமுத்திரம், மோளையானூர், தேவராஜபாளையம், விழுதப்பட்டி, மெணசி, பூதநத்தம், ஆலாபுரம் ஜம்மனஅள்ளி ஆகிய பகுதிகள் வழியாக செல்கிறது.

தூர்வாரப்படவில்லை

விழுதிப்பட்டி அருகே அப்புகல் மலை அடிவாரத்தில் இடது புற கால்வாயில் இருந்து கிளை கால்வாய் பிரிந்து செல்கிறது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்தநிலையில் அந்த கிளை கால்வாய் முறையாக மராமத்து பணி செய்யப்படாததால் புதர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது.

இதனால் அணை கட்டப்பட்டு இதுவரை 3 முறை மட்டுமே இந்த கிளை கால்வாய் வழியாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் சென்றுள்ளது. கால்வாய் தூர்வாரப்படாததால் பல ஆண்டுகளாக இதன் வழியாக தண்ணீர் செல்லவில்லை. இதனால் தண்ணீர் இல்லாமல் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.

கோரிக்கை

இதனிடையே பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளதால் வாணியாறு அணை நிரம்பி அதில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் விவசாய பணிக்கு உபயோகமின்றி வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் கிளை கால்வாயை தூர்வாரி சீரமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே வாணியாறு இடதுபுற கிளை கால்வாயை தூர்வாரி, தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story