விவசாய நிலங்கள் பாழாவதை தடுக்க மதுபாட்டில்களை திரும்பப்பெற வேண்டும்; குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
விவசாய நிலங்கள் பாழாவதை தடுக்க மதுபாட்டில்களை திரும்பப்பெற வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாய நிலங்கள் பாழாவதை தடுக்க மதுபாட்டில்களை திரும்பப்பெற வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இதில் வேளாண்மை இணை இயக்குனர் அனுசுயா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ரவிச்சந்திரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளுக்கு, அதிகாரிகள் அளித்த பதில் விவரம் வருமாறு:-
ராஜேந்திரன்:- பரப்பலாறு அணை மற்றும் குளங்களில் வண்டல் மண் சேர்ந்து விட்டது. அதை விவசாய பயன்பாட்டுக்கு அள்ளுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
நல்லசாமி:- விவசாய நிலங்களில் காலி மதுபான பட்டில்கள் வீசப்படுகின்றன. டிராக்டர் மூலம் உழவு பணி செய்தால் பாட்டில்கள் உடைந்து விவசாயிகள், தொழிலாளர்களின் கால்களில் குத்திவிடுகின்றன. எனவே காலி மதுபான பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதனால் விவசாய நிலங்கள் பாழாவதை தடுக்கலாம்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர்:- காலி பாட்டில்களை தனியார் அமைப்புகள் மூலம் பெறுவதற்கு பரிசீலனை செய்யப்படும்.
கலெக்டர்:- கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டை 95 சதவீதம் தடுத்து இருக்கிறோம். இதேபோல் மாவட்டம் முழுவதும் செயல்படுத்த பரிசீலனை செய்யப்படும்.
வண்டல் மண்
முத்துசாமி:- சாணார்பட்டி பகுதியில் மா மரங்களில் இருக்கும் பிஞ்சுகள் உதிர்ந்து விழுகின்றன. அதை தடுக்க உரிய ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர்:- இலவச மின்இணைப்புக்கு மாநிலம் முழுவதும் விவசாயிகள் காத்திருக்கின்றனர். முன்னுரிமை அடிப்படையில் இணைப்பு வழங்குவார்கள்.
தங்கவேல்:- ஆர்.கோம்பை பகுதியில் காட்டெருமைகள் தண்ணீருக்காக விளைநிலங்களுக்கு வருகின்றன. எனவே மலைப்பகுதிக்கு அருகே இருக்கும் குளங்களை தூர்வாரி மழைநீரை தேக்கினால் வனவிலங்குகள் பயன்பெறும். எனவே வண்டல்மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர்:- குளங்களில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக கலெக்டர் அறிவிப்பார்.
மாரிமுத்துராமன்:- மழைக்காலத்தில் காவிரி ஆற்றில் வீணாகும் தண்ணீரை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி கொண்டு வந்து நத்தம் வழியாக சிவகங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
குடகனாற்றில் கழிவுநீர்
ராமசாமி:- குடகனாறு தண்ணீர் பங்கீடு தொடர்பான வல்லுனர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும். குடகனாற்றில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதால் கூவமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. அதை தடுக்க வேண்டும்.
கலெக்டர்:- ஆறு, குளம், அணைகளில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதை அனுமதிக்க முடியாது. இதுதொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் 20 நாட்களுக்குள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை செய்ய தவறினால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கருணாகரன்:- ஒட்டன்சத்திரம் பகுதியில் அட்டகாசம் செய்த ஒற்றை யானையை வனத்துறையினர் விரட்டி விட்டனர். அது மீண்டும் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்வலி கிழங்கு, விதைக்கு உரிய விலை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தோட்டக்கலை துணை இயக்குனர்:- கண்வலி கிழங்கு, விதையை ஆன்லைனில் விற்பனை செய்யும் முறை விரைவில் வர இருக்கிறது. கண்வலி கிழங்கு விவசாயிகள் சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெயரை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மழையால் நெற்பயிர்கள் நாசம்
சரவணன்:-கம்பிளியம்பட்டியில் சிங்கமுத்தன் குளத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கலெக்டர்:-அனைத்து குளங்களையும் அளவீடு செய்து அவற்றில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனடியாக அதிகாரிகள் அகற்ற வேண்டும்.
பெருமாள்:- சாணார்பட்டி, நத்தம் பகுதிகளில் மா மரங்களில் பிஞ்சு, பூக்கள் உதிர்ந்துவிட்டன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டும். பழனியில் பலத்த காற்று, மழைக்கு 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் நாசமாகிவிட்டன. அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர்:- மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
சுந்தரராஜ்:- மாவட்டத்தில் விவசாயத்துக்கான தண்ணீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்குவதற்கு அனைத்து ஆறுகளையும் இணைக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகளின் கேள்விகளுக்கு, அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.