பாலியல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டமுன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மேல்முறையீட்டு மனுதாக்கல்


பாலியல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டமுன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மேல்முறையீட்டு மனுதாக்கல்
x
தினத்தந்தி 6 July 2023 12:15 AM IST (Updated: 6 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

விழுப்புரம்

பாலியல் வழக்கில் சிறை

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ், பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெண் அதிகாரி அளித்த புகாரின்பேரில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மற்றும் அவரது உத்தரவின்பேரில் பெண் அதிகாரியின் காரை வழிமறித்து கார் சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டுக்கு ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மேல்முறையீட்டு மனுதாக்கல்

செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு சார்பில், கீழ்கோர்ட்டு விதித்த தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 22-ந் தேதி மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. சார்பில் அவரது வக்கீல்கள், மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளனர். இம்மனு மீதான விசாரணை எப்போது நடைபெறும் என்ற விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என்று நீதிமன்ற வட்டாரம் தெரிவித்தன.


Next Story