பெண் அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்த வழக்கு: செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு விழுப்புரம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல்
பெண் அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்த வழக்கில் செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு விழுப்புரம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளாா்.
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ், பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பெண் அதிகாரி அளித்த புகாரின்பேரில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ், அவரது உத்தரவின்பேரில் பெண் அதிகாரியின் காரை வழிமறித்து கார் சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த 16-ந் தேதியன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டுக்கு ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்நிலையில் செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு சார்பில், கீழ்கோர்ட்டு விதித்த தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று வக்கீல் ஹேமராஜன், மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை எப்போது நடைபெறும் என்ற விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.