60 வயது நிறைவடைந்த விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்-சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
தர்மபுரி:
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் பிரதாபன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் காலை 7 மணிக்கு வேலைக்கு வர வேண்டும் என்பதை காலை 9 மணி என மாற்றி அமைக்க வேண்டும். இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். நீர் நிலை புறம்போக்கு இடங்களில் குடியிருக்கும் ஏழை எளிய மக்களை வெளியேற்ற கூடாது. 60 வயது நிறைவடைந்த விவசாய தொழிலாளர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மாதம் தலா ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தர்மபுரி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.