சொட்டுநீர் பாசன திட்டங்களில் மாற்றங்கள் வருமா?


சொட்டுநீர் பாசன திட்டங்களில் மாற்றங்கள் வருமா?
x

சொட்டுநீர் பாசன திட்டங்களில் மாற்றங்கள் வருமா?

திருப்பூர்

விவசாயத்துக்கான சொட்டுநீர்ப் பாசனத் திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பாசன நீர் பற்றாக்குறை

குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி அதிக பரப்பளவில் விவசாயம் செய்வது என்பதே சொட்டு நீர்ப் பாசனத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் பாசன நீர்ப் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், மானிய விலையில் அரசு வழங்கும் சொட்டுநீர்ப் பாசன திட்டங்கள் விவசாயிகளுக்கு பெருமளவில் கைகொடுத்து வருகிறது.

ஆனாலும் சொட்டுநீர்ப் பாசனத் திட்டங்களில் சில மாற்றங்கள் கொண்டு வருவது விவசாயிகளுக்கு நன்மை தருவதாக இருக்கும் என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

விவசாயப் பணிகளில் எந்திர மயமாக்கல், வீரிய ஒட்டு ரக விதைகள் பயன்பாடு உள்ளிட்ட மாற்றங்கள் எவ்வளவு தவிர்க்க முடியாததாக உள்ளதோ அதே அளவுக்கு பாசன முறைகளில் சொட்டு நீர்ப் பாசனம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது.இதனால் விவசாயிகள் சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதனை ஊக்குவிக்கும் வகையில் விளை நிலங்களில் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க அரசு சார்பில் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.

மதிப்பீடு

100 சதவீதம் மானியம் என்று அறிவிக்கப்பட்டாலும் ஒவ்வொரு விவசாயியும் தாங்கள் விரும்பும் வகையில் சொட்டு நீர்ப் பாசனக் குழாய்கள் அமைக்க பெரும் தொகையை செலவிட வேண்டிய நிலை உள்ளது.எனவே விவசாயிகளின் நில அமைப்பு, சாகுபடி செய்ய விரும்பும் பயிர், கிணற்றுக்கும் சாகுபடி நிலப்பரப்புக்குமான இடைவெளி உள்ளிட்டவற்றை அளவீடு செய்து அதற்குத் தகுந்த அளவில் மானியம் ஒதுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. சொட்டுநீர்ப் பாசனத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டுத் தொகையை மறு மதிப்பீடு செய்து, அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். சொட்டு நீர்ப் பாசனத்துக்கு இதுவரை நிதி ஒதுக்கப் படாததால் பணிகளை தொடங்க முடியாத நிலை உள்ளது. அதனால் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க பதிவு செய்துள்ள விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது.எனவே விரைவில் விவசாயிகளின் தேவைக்கேற்ப சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்று விவசாயிகள் கூறினர்.

----

Reporter : T. Subakaran Location : Tirupur - Udumalaipet - Bodipatti


Next Story