பழனி முருகன் கோவில் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை; தந்தை-மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


பழனி முருகன் கோவில் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை; தந்தை-மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x

விளைநிலங்களுக்கான குத்தகை பொதுஏலத்தை நிறுத்தக்கோரி பழனி முருகன் கோவில் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தந்தை-மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

விளைநிலங்களுக்கான குத்தகை பொதுஏலத்தை நிறுத்தக்கோரி பழனி முருகன் கோவில் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தந்தை-மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகள் முற்றுகை

பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான விளைநிலங்கள் அடிவாரம், அய்யம்புள்ளி உள்ளிட்ட இடங்களில் உள்ளன. இந்த நிலங்களை, பழனி பகுதியை சேர்ந்த விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் கோவில் விளைநிலங்கள் நேற்று பொது ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பழனி கோவில் நில குத்தகை விவசாயிகள் பலர் கோவில் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் விளைநிலங்களுக்கான குத்தகை ஏலத்தை நிறுத்தி வைக்க வேண்டும் எனக்கோரி விவசாயிகள் மனு கொடுத்தனர். அப்போது கோவில் உதவி ஆணையர் லட்சுமி தரப்பில் ஏலத்தை நிறுத்த முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், கோவில் அலுவலகம் முன்பு அமர்ந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீக்குளிக்க முயற்சி

இதுகுறித்து தகவல் அறிந்த பழனி அடிவாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாயிகள் கலைந்து செல்ல மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே பழனி ஆலமரத்துகளம் பகுதியை சேர்ந்த விவசாயி செந்தில் (வயது 56), அவருடைய மகன் லிங்கேஸ்வரன் (25) ஆகியோர் தாங்கள் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக 2 பேரிடம் இருந்த பாட்டில்களை பிடுங்கினர். தொடர்ந்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். கோவில் அலுவலக பகுதியில் விவசாயிகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

23 பேர் கைது

இந்தநிலையில் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி அங்கு வந்தார். பின்னர் அவர், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 23 விவசாயிகளை கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

முன்னதாக விவசாயிகள் கூறும்போது, பல ஆண்டுகளாக குத்தகை செலுத்தி விவசாயம் செய்யும் விளைநிலங்களை பொது ஏலம் விடுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது. இதுதொடர்பாக கடந்த ஆகஸ்டு மாதம் பழனி ஆர்.டி.ஓ.விடம் மனு அளித்தோம். அப்போது ஆர்.டி.ஓ. முன்னிலையில் கோவில் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் 6 மாதத்துக்குள் தாசில்தாரிடம் குத்தகை உரிம பதிவுக்கு உத்தரவு பெற்று கோவில் சார்பில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், குத்தகை பாக்கி உள்ளவர்களுக்கு பாக்கி விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் திடீரென பொது ஏலம் விடப்படும் என்று அறிவித்திருப்பது பேச்சுவார்த்தைக்கு முரண்பாடாக உள்ளது. எனவே ஏலத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story