உப்புக்கோட்டை பகுதியில் வாழைத்தார் விலை அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி
உப்புக்கோட்டை பகுதியில் வாழைத்தார் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு பாசனத்தின் மூலம் நெல், கரும்புக்கு அடுத்தபடியாக வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக கடைமடை பகுதியான உப்புக்கோட்டை, பாலார்பட்டி, கூழையனூர், குண்டல்நாயக்கன்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி ஆகிய பகுதிகளில் கற்பூரவல்லி, நாலிபூவன், நாட்டுவாழை, ரஸ்தாலி, திசுவாழை போன்றவை 1,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு போதிய தண்ணீர் வரத்து மற்றும் நோய் தாக்குதல் குறைவாக இருப்பதால் வாழை நன்றாக விளைச்சல் அடைந்து உள்ளது.
இதற்கிடையே உள்ளூர் மார்க்கெட்டுகளில் வாழைத்தார் வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ.13-க்கு விற்பனையான ஒரு கிலோ வாழைக்காய், தற்போது ரூ.30-க்கு விற்பனை ஆகிறது.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், உப்புக்கோட்டை பகுதியில் இந்த ஆண்டு பரவலாக மழை பெய்ததாலும், போதிய தண்ணீர் இருப்பு இருந்ததாலும் வாழை நன்றாக விளைச்சல் அடைந்தது. அதேபோல் தற்போது வாழைத்தார் விலை அதிகரித்துள்ளதால் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் பலரும் நேரடியாக வந்து வாழைத்தார்களை கொள்முதல் செய்து வருகின்றனர் என்றார்.